நாட்டின் எட்டாவது பாராளுமன்றம் திங்கட்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து வருட ஆயுட்காலம் நிறைவு பெற ஒன்பது மாதங்கள் இருக்கும்போதே, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டியதைத் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து நல்லாட்சி அரசாங்கம் பதவி விலகிக் கொள்ள, மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகி அவரது தலைமையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, ஏப்பிரல் மாதம் 25 ஆந் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 889 பேர் வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 2 இலட்சத்து 71 ஆயிரத்து 789 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்கள். இவர்கள் அனைவரும் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் புதிதாக பதியப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் “காபந்து” அரசாங்கம் அமைய, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் “முன்னாள்” உறுப்பினர்கள் என்ற அடைமொழியோடு தேர்தலில் களம் இறங்கத் தயாராக இருக்கின்றார்கள். சிலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். அந்நேரம், புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கலாம். அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஓரளவு வேட்பாளர் விடயத்தில் தயாராக இருந்தாலும் உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் மாற்றங்கள் இடம்பெறவும் வாய்ப்பு இருக்கின்றது. தேசியக் கட்சிகளுக்கு இடையில் இருந்து வந்த முரண்பாடுகள் ஓரளவு நிவர்த்தியாகி இருந்தாலும் இன்னும் சில முக்கிய விடயங்களில் இழுபறி நிலை இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்பார்ப்புகள்
இந்த நாட்டில் காலம் காலமாக இடம்பெற்று வரும் தேர்தல்களில் தமிழ் பேசும் மக்கள் தமது பங்களிப்பை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகின்றார்கள். அதன் ஊடாக தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பினாலும் தற்காலிகத் தீர்வைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்வை எட்டமுடியாமல் இருந்து வருகின்றன. முப்பது வருட யுத்தம் நிறைவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகியும் அந்த மக்களின் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. அதற்கான தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றபோதிலும் ஆட்சிக்கு வரும் அரசுகள் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.
ஐ,நா. மனித உரிமை பேரவையில் இணை தலைமையில் இருந்து வந்த இலங்கை இந்த முறை அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளமை தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் உதாசீனம் செய்துள்ளதாகவே தமிழ் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்திலும், அவரை பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி இறக்கிய நேரத்திலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே அவருக்குக் கைகொடுத்து காப்பற்றியுள்ளார்கள். இருந்தும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை தொடர்ந்து வருகின்றது. அவர்கள் அரசியல் ரீதியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.
எமது நாட்டில் எந்தவொரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையில் இருப்பார்கள் அதேபோல், மலையக இந்திய வம்சாவளி மக்களை எடுத்துக் கொண்டால் கடந்த அரசாங்கத்தில் வழமையாக அமைச்சுப் பதவியில் இருந்து வரும் இ.தொ.கா. வினர் இடம்பெறாத போதிலும், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து வந்ததோடு, மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் அமைச்சரவையில் இருந்ததோடு, வீ. இராதாகிருஸ்ணன் அமைச்சராக இருந்தார். அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஆறு பேர் பாராளுமன்றத்தில் இருந்தார்கள்.
எனவே, மலையக மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் உட்பட பல திட்டங்களை ஏற்படுத்த முடிந்தது. பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகரிப்பு, அபிவிருத்தி அதிகார சபை உட்பட உரிமைசார் விடயங்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அது முழுமை பெறவில்லை என்றாலும் அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அதைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கின்ற அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகி, இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஐந்து பிரதேச செயலகங்கள் நுவரெலியா மாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இவை பாராளுமன்றத் தேர்தலில் வலியுறுத்தப்பட வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டது போல, பாராளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளோடு அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தேரர் ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறு இனவாதம் தலைதூக்கியுள்ள காலகட்டத்தில்தான் முக்கியமான தேர்தலும் வருகின்றது.
வடக்கில் தமிழ்க் கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக் கொண்டு தேர்தலில் போட்டியிட ஆயத்தமாக உள்ளன. அதேபோல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகளும், மலையகக் கட்சிகளும் போட்டியிடவுள்ளன.
இவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டும், வெற்றி பெறக் கூடாது என்பதற்காக வேட்பாளர்களை போட்டிக்காக களம் இறக்காமல் கடந்த கால தவறுகளை மீண்டும் அரங்கேற்றாமல் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சமூக உணர்வோடு சிந்தித்து செயற்படும் பட்சத்தில் பெரும்பான்மை சமூகத்திற்கு நிகராக தலைநிமிர்ந்து நிற்க முடியும். தவறினால் அவர்களிடம் பேரம் பேசும் சக்தியை பறிகொடுத்து கையேந்தும் நிலை உருவாகி விடும் என்பதும் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பொதுஜன பெரமுன ஆட்சி அதிகாரத்திலும் இருப்பதால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் வேட்பாளர்களை களம் இறக்குவதில் மும்முரமாக இருந்து வருகின்றது. அதற்கு பக்கபலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் அதனுடன் இணைத்துக்கொண்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போது முரண்பட்டுக்கொண்ட சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இம்முறை பொதுஜன பெரமுனவுடன் கூட்டு சேர்ந்துகொண்டுள்ளார்கள். ஏனைய கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இந்தக் கூட்டணியோடு சங்கமித்துள்ளன.
பொதுஜன பெரமுன கூட்டணியின் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ இருக்கும் போது, சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ஸவும், பொலன்னறுவையில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடவுள்ளார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது.
பதவியில் உள்ள அரசாங்கம் அதன் அதிகார செல்வாக்குடன் அபிவிருத்திப் பணிகளை வழமையாக முன்னெடுத்து வருவதுண்டு. அது மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவும் இருந்து விடுகின்றது. மேலும், அரசாங்கத்தின் பொறிமுறை தேர்தல் களத்தில் செல்வாக்கு பெற்று வருகின்றது. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாகவும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியின் ஊடாகவும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி
சர்ச்சைகளுக்கும் உள்ளக முரண்பாடுகளுக்கும் பெயர்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸவின் கைகள் ஓங்கியுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த இழுத்தடிப்புகள் இடம்பெற்று வந்தது போல, பாராளுமன்றத் தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக நிற்பதற்கும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி தலைவராக சஜித் நியமனம் பெற்றும் அதற்கான சின்னம் தொடர்பில் இன்னுமும் சிக்கல் நிலை இருந்து வருகின்றது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 10 அரசியல் கட்சிகள், 18 தொழிற்சங்கங்கள், 20 சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய “ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டணி ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு தாமரை தடாகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, நவீன் திசாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம் உட்பட முக்கியஸ்தர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம், “யானை” சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வருகின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் “யானை” சின்னத்தில் போட்டியிட்டால் “கூட்டணி” அமைத்ததில் அர்த்தம் இல்லாமற் போய்விடும். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால்தான் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டணிக்குத் தலைவராக அதாவது “ஐக்கிய மக்கள் சக்திக்கு” தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டு, வேட்பாளர் தெரிவு, தேசியப் பட்டியல் தெரிவு என பலவற்றுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகாரத்தை வழங்கிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் “யானை” சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறி அதை ஏற்றுக்கொண்டால் அதன் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தான் சகல ஆவணங்களிலும் கையொப்பம் இடக்கூடிய அங்கீகாரம் பெற்றவராக இருப்பார்.
அதேபோல், “அன்னம்” சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்தால் அதன் செயலாளராக ரவி கருணாநாயக்க இருப்பதால் அவருக்கே சகல அதிகாரங்களும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் “ஐக்கிய மக்கள் சக்திக்கு” தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாஸ பெயருக்குத் தான் தலைவராக இருப்பாரே தவிர, எதையும் தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு இருக்காது. எனவே, இந்தத் தேர்தலில் ஐ.தே.க. வின் ஒற்றுமையைக் கருத்திற் பிளவுபடாமல் இருக்கும் வகையில் தற்காலிகமாக சஜித் பிரேமதாஸவுக்கு யானை சின்னத்தை கையளித்தால் கட்சி பிளவு படுவதிலிருந்து காப்பாற்றிக்கொள்ளலாம்.
அவ்வாறு இல்லையேல், சஜித் பிரேமதாச வின் கூட்டணி தனியான சின்னத்தில் களம் இறங்க வேண்டிய நிலை உருவாகும்., “ஐக்கிய மக்கள் சக்தியின்” சின்னம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை இந்த வாரத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இ.தொ.கா. வின் வேட்பாளர்கள்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட இ.தொ.கா.வுக்கு இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே கிடைத்திருந்தார்கள். ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்ற போதிலும் அமைச்சுப் பொறுப்பு எதனையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல் இருந்து வந்தார்கள். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருக்கின்றார். அமைச்சுப் பொறுப்போடு தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடத் தயாராக இருகின்றார்கள். ஆரம்பத்தில் 5 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இ.தொ.கா. ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், மூன்று பேர் மாத்திரமே நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக இப்போது தெரிய வருகின்றது. அதில் ஆறுமுகன் தொண்டமான், எம். இராமேஸ்வரன் ஆகிய இரண்டு பெயர்கள் உறுதியாக இருக்கும் போது, மூன்றாவது வேட்பாளராக இடம்பெறப் போவது இராஜ துரையாக இருக்கலாம் அல்லது சக்திவேல் போட்டியிடலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும், பதுளை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் போட்டியிடவுள்ளார். கண்டி மாவட்டத்தில் ஆரம்பத்தில் ஜீவன் தொண்டமானின் பெயர் அடிபட்ட போதிலும் இப்போது பாரத் அருள்சாமி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, கேகாலை, இரத்தினபுரி முதலான இடங்களில் சேவல் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறி வருவதில் எந்தளவு உண்மைத் தன்மை இருக்கும் என்று தெரியவில்லை.
பொதுஜன பெரமுன கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தில் எஸ். சதாசிவம், முத்தையா பிரபாகரன், அனுஷா சந்திரசேகரன் ஆகியோரின் பெயர்களும் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தாலும் இறுதி நேரத்தில் யாருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரியாது. இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளார்கள். பட்டியலில் 11 பேரின் பெயர்கள் இடம்பெறும். நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் 5 சிங்கள வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இ.தொ.கா.வுக்கு மூன்று வேட்பாளர்கள் என்றால், மிகுதியாக மேலும் மூன்று வேட்பாளர்களில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்
தமிழ் முற்போக்கு கூட்டணி மத்தியில் இருந்து வந்த சலசலப்பு கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அதில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 3 வேட்பாளார்கள் போட்டியிட்டால் நான்காவது வேட்பாளராக மலையக மக்கள் முன்னணி போட்டியிடுவதில் சிக்கல் நிலை உருவாகும் என்பதால் மலையக மக்கள் முன்னணி தனி வழி செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் கூட்டம் கடந்த வாரம் அட்டனில் இடம்பெற்ற போது, அதில் விளக்கம் தரப்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
அதன் தலைவர் பி.திகாம்பரம் பேசும் போது, நுவரெலியா மாவட்டத்தில் இராதா கிருஷ்ணன் உட்பட மூன்று பேர் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தொழிலாளர் தேசிய சங்கத்தில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் விபரம் தெரியவில்லை. அதன் தலைவர் திகாம்பரம் தேசியப் பட்டியல் உறுபினராக இருந்து கொண்டு உதயா, திலகர் ஆகியோருக்கு இடம் கொடுப்பாரா அல்லது. இந்த இருவரில் ஒருவர் தேசியப் பட்டியலில் இடம்பெறுவார்களா என்பது விரைவில் தெரிந்து விடும்.
இது இவ்வாறு இருக்க ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் ஐந்து சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடும் போது, பட்டியலில் உள்ள ஏனைய 6 வேட்பாளர்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் போக எஞ்சியுள்ள மூன்று வேட்பாளர்களில் அட்டன்- டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.கேசவமூர்த்தி இடம்பெறவுள்ளார். அடுத்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவரும், ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினருமான அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முருகையா இரவீந்திரன் பெயரும் இடம்பெறவுள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.
அதேபோல், கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசன், பதுளை மாவட்டத்தில் ஏ. அரவிந்தகுமார், கண்டி மாவட்டத்தில் வேலு குமார் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். வடிவேல் சுரேஷ் ஐ.தே.க. சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
திலகர், ஜீவன் தேசியப் பட்டியலில்
தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த முறை பெற்றுக்கொண்ட 6 உறுப்பினர்களை இம்முறையும் தக்க வைத்துக் கொண்டு தேசியப் பட்டியல் ஊடாக ஓர் உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காயை நகர்த்தி வருகின்றது. அநேகமாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தேசியப் பட்டியலில் இடம்பெறலாம் என்று நம்பப்படுகின்றது.
அதேபோல், இ.தொ.கா. சார்பில் ஆறுமுகன் தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமானை தேர்தலில் போட்டியிடச் செய்யும் போது எந்தளவு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று கூறப்பட்டாலும் மறுபுறம் மலையக இளைஞர்களின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் கூட ஆளாகலாம். எனவே, வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் இ.தொ.கா.வுக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஊடாக ஜீவன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது..
- பானா. தங்கம்-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM