முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்கும் நிர்வாகத்துக்கும் சிலரால்  இழுக்கு ஏற்படுத்தபடுவதை கண்டித்து ஆலய நிர்வாகத்தினரால் பிரதேச மக்களாலும் இன்றையதினம் (04.03.2020) மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக ஒட்டுசுட்டானில் வசிக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களால் ஆலயத்துக்கும் ஆலய நிர்வாகத்துக்கும் எதிராக பொய் பிரசாரங்கள் அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதை கண்டிக்கும் முகமாக இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கபட்டது.

குறித்த குடும்பத்தில் வைத்தியர் ஒருவர் தலைமையில் சிவத்தொண்டர் சபை என்ற அமைப்பை நிறுவி அதன்  மூலம் வீண் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு ஆலய நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு  ஆலயத்தின் நற்பெயரையும் பக்தர்களின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் மேற்படி குடும்பத்தினர் செயற்பட்டு வருவதோடு ஆலயத்தில் ஒலிபெருக்கி பாவிப்பதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து வழக்கு தாக்கல் செய்து ஒலிபெருக்கி பாவிப்பதையும்  தடை செய்துள்ளதோடு விழா காலங்களில் வேண்டும் என்றே தடைகளை மேற்கொண்டும் வருகின்றனர் என போராட்த்தில் ஈடுபட்ட மக்கள்  குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

ஒட்டுசுட்டான்  தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக வாயில் வரை சென்று அங்கு ஜனாதிபதி ,பிரதமர், ஆளுநர்  மற்றும்  உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்க பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் கையளிக்கபட்டது .

இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரேமகாந் பிரதேச சபை உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.