நாட்டின் எட்டாவது பாராளுமன்றம் கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களுக்கு அமைவாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்தினால் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.
அதன்படி அடுத்த 9ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுக்கோரல்கள் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது.
நாட்டின் பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது. 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக வாக்காளர்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்படுவார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தேசிய மட்டத்தில் பெறுகின்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே தேசிய பட்டியல் ஊடாக எத்தனை ஆசனங்கள் கட்சிகளுக்கு கிடைக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.
22 தேர்தல் மாவட்டங்கள், 160 தேர்தல் தொகுதிகள் என்ற அடிப்படையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் வாக்களிப்பு நடைபெற விருக்கிறது. தேர்தல் ஆணைக்குழுவானது நேற்று முதல் அடுத்த பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 600 கோடி ரூபா அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்காக செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விசேடமாக அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளன. பெரும்பாலும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க முயற்சித்து வருகின்றன. அந்த அடிப்படையில் கூட்டணிகளை அமைக்கும் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன.
கடந்த 8 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது. அதனடிப்படையில் நான்கரை வருடங்கள் முடிவில் பாராளுமன்றம் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் காணப்பட்டது. எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதியால் கலைக்க முடியுமானவகையில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஜனாதிபதியினால் நான்கரை வருடங்கள் கடந்தே பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதியுடன் எட்டாவது பாராளுமன்றத்திற்கு நான்கரை வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் எட்டாவது பாராளுமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டது. எனினும் அதற்கு எதிராக அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தன. இறுதியில் நான்கரை வருடங்களுக்கு முன்னர் முன்னைய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறான வரலாற்று பின்னணியிலேயே எட்டாவது பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில் புதிய பாராளுமன்றத்திற்கு சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பவேண்டிய கடமையும் பொறுப்பும் மக்களிடத்திலேயே காணப்படுகின்றது.
தேர்தல் என்பது ஜனநாயக செயற்பாட்டில் மிக முக்கியமான ஒரு இயங்கு கருவியாகும். தேர்தலின் ஊடாகவே மக்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி பிரதிநிதிகளை தெரிவு செய்து நாட்டை ஆள்வதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றனர். மக்கள் ஜனநாயக ரீதியில் தமக்கு விருப்பமான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றனர். பாராளுமன்றமே இந்த நாட்டில் சட்டங்களை உருவாக்குவதுடன் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுகின்ற அரசியல் கூட்டணியே ஆட்சி அமைக்கும். இலங்கையின் பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் 225 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 113 ஆசனங்களை பெறும் அரசியல் கூட்டணி அல்லது அரசியல் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெறுகின்றது.
இந்த சூழலில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பவேண்டிய பொறுப்பு வாக்காளர்களின் கைகளில் இருக்கின்றது. அதேபோன்று அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது ஊழலற்ற, மக்களுக்கு சேவையாற்றக்கூடிய தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் தேர்தல் என்பதால் மக்களும் மிக நிதானமாகவே இந்த விடயத்தில் முடிவெடுக்கவேண்டும். அரசியல் ரீதியாக ஆழமான முறையில் ஆராய்ந்தே வாக்காளர்கள் தமது வாக்கை பயன்படுத்துவது அவசியமாகும்.
அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் உரிய முறையில் கடைப்பிடித்து தேர்தலில் போட்டியிடவேண்டும். எக்காரணம் கொண்டும் தமது ஆதரவாளர்களோ அல்லது வேட்பாளர்களோ அல்லது தமது கட்சிகளின் பிரதிநிதிகளோ தேர்தல் சட்ட விதிகளை மீறுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் இடமளிக்கக்கூடாது. தேர்தல் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கவேண்டும் என்ற விடயம் மிக கடுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.
இந்த இடத்தில் வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது என்பதை புரிந்து செயற்படவேண்டும். மிக முக்கியமாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்புக்களை கொடுக்கவேண்டியது அவசியமாகும். இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் அரசியலில் பெண்களின் செயற்பாட்டு பங்களிப்பு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையின் 52 வீதமானோர் பெண்களாக உள்ளனர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஐந்து வீதமான பெண்களே நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்தனர்.
இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. பெண்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்களவில் அரசியலில் இருக்கவேண்டும். இதற்கு அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். இந்த இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்திலேயே பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க முடியும்.
எப்படியிருப்பினும் தற்போது ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும். அனல்பறக்கும் பிரசாரங்கள் இடம் பெறும். இந்த இடத்தில் மிக முக்கியமாக அனைத்து தரப்பினரும் சட்ட திட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதே மிக முக்கியமாகும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு தம்மை ஆளப்போகின்ற பிரதிநிதிகள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கவேண்டும். எனவே வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். வாக்களிக்காமல் விடுவது தமது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கு சமனாகிவிடும். எனவே அவ்வாறு இல்லாமல் வாக்காளர்கள் ஜனநாயக உரிமையை உச்ச பட்சமாக பயன்படுத்தி வாக்களிக்கவேண்டும். முக்கியமாக பண்பான மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஊழலற்ற வெளிப்படையான தலைவர்களை உருவாக்கவேண்டிய பொறுப்பு வாக்காளர்களிடமே காணப்படுகின்றது.
எனவே ஏப்ரல் 25 ஆம் திகதி மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்து தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளு மன்றத்திற்கு அனுப்பவேண்டும்.
(04.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM