பொறுப்புக் கூறலை உறுதிபடுத்தும் பொருட்டு , உண்மைகளை கண்டறிவதற்காக நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி பொது மக்களிடமிருந்து யோசனைகளை  பெற்றுக் கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. 

  சமர்ப்பித்தல்களை  பொது மக்களினால் தனியாகவோ குழுவாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ சமர்பிக்க முடியும். இரகசியங்கள் பேணப்பட வேண்டுமாயின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி அதற்கான உறுதிமொழியை வழங்கும் என்று  செயலணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி  கடந்த ஜனவரி மாதம் பிரதமரினால் ஸ்தாபிக்கப்பட்டது. உண்மைகளை கண்டறிந்து நீதியை நிலை நாட்டல் , மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் , நல்லிணக்கத்திற்கான பொறிமுறையை ஸ்தாபிக்க பொது மக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்வதே செயலணியின் பணியாகும்.

இவற்றை மையப்படுத்தி , காணாமற்போனோர் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் , உண்மை, நீதி , நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு உள்ளிட்ட விஷேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதி பொறிமுறையை ஏற்கனவே செயலணி ஸ்தாபித்துள்ளது. 

இந்நிலையில் ,  சமர்ப்பித்தல்களுக்கான இறுதி திகதி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வழங்கப்பட்ட காலநீடிப்பின் பிரகாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

இந்த சமர்ப்பணங்களை ctf.srilanka@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அல்லது  கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து , செயலாளர் ,நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ,  நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசு கட்டிடம் , இலக்கம் - 01 , சேர்.பரோன் ஜயதிலக மாவத்தை , கொழும்பு - 01 என்ற முகவரிக்கு  அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.