கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கமுவ மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் இணைந்து விமானப் படை ஹெலிகொப்டரின் உதவியுடன்  குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த தீப்பரவலால் 8 ஏக்கர் அளவிலான நிலப்பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

மேலும், நானுஓயா - ரதெல்ல வத்த வனப்பகுதியிலும் செவ்வாய்க்கிழமை  பிற்பகல் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸார், நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப்பிரிவு  மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இந்த திடீர் தீப்பரவலால் இரண்டரை ஏக்கர் நிலப்பகுதிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.