இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மும்மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலைக் கட்டவுள்ளதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லோரன்ஸ் பல விதமான சமூக பணிகளிலும் ஈடுபட்டு அனைவரின் மனதிலும் நீங்கா நன்மதிப்பை பெற்றுள்ளார். மேலும், அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு வைத்திய  சிகிச்சைக்காக நிதி உதவியும் அளிக்கிறார். திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார். 

இந்த நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் வகையில் புது முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார்.  மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் ஓரு ஆலயம் அமைக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். 

இது தொடர்பாக நடிகர் விடுத்திருந்த அறிக்கையில், மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த முயற்சி. நெருப்பிற்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.