நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தாய் அழைத்த போது வீதியின் குறுக்காக வீட்டிற்கு ஓடிச் சென்ற சிறுவனை ஹயஸ் வாகனம் மோதியதில் குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஈவினை புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த ஜீவன் அபிசரன் (வயது 4)என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுவன் தனது வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அவரின் தாயார் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். 

தாய் கூப்பிட்டதை அடுத்து சிறுவன்  வீட்டை நோக்கி வீதியில் ஓடி சென்றுள்ளார். அப்போது வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் மோதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் குறித்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் ஏற்கெனவே ஓர் ஆண் குழந்தை இறந்து விட்டது. 

தற்போது இந்த சிறுவனும் உயிரிழந்துள்ளான். தற்போது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை உடன் குறித்த குடும்பத்தலைவி கணவனை பிரிந்த நிலையில் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.