பெண்களாகிய நாம் ஒரு சக்திவாய்ந்த பொறுப்புக் கூறக் கூடிய பெண்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம். இந்த முயற்சிக்கு தோள் கொடுக்கும் பொறுப்பு பெண்கள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் உண்டு. எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 வீத இடஒதுக்கீடு செய்யுங்கள் என்று  பெண்கள் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில்,  மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'பெண்களின் ஆட்சி ஜனநாயகத்தின் எழுச்சி' என்ற கருப்பொருளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வு தெருக்கூத்துடனும்  பிரசுரங்களுடனும் இடம்பெற்று வருகின்றது.

செவ்வாய் கிழமை (03.03.2020) மன்னார் நகர் பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு தெருக்கூத்தலின் போது பெண்கள் குடும்பங்களிலும், தங்கள் வாழ்வாதாரத்திலும், சமூக மட்டத்திலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சித்தரிக்கும் விடயங்களை எடுத்துக்காட்டினர்.

இது தொடர்பில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

இலங்கையின் அரசியலில் அதிகாரப் பேராசை, ஊழல் வன்முறை, புறக்கணிப்பு, பாரபட்சம், மத ரீதியான தீவிரவாதம், இனவாதம், சுரண்டல், தான்தோன்றித்தனம் மற்றும் அநாகரீகம் என்பவை மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இதில் விசேடமாக சனத்தொகையில் 52 வீதமானோரின் இலங்கைப் பெண்கள் தொடர்ந்தும் அநீதிக்கும், ஒடுக்கு முறைக்கும், பாரபட்சத்துக்கும் ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.

சொல்லளவில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக சோசலிசக் குடியரசு எனக் கூறிக்கொள்ளும் இந்த அநாகரீகமான ஒடுக்குமுறை அதிகாரக் கட்டமைப்பினுள் நாம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதா?

52 வீதமான பெண்களாகிய நாங்கள் இனம், மதம், சாதி, மொழி, பால்நிலை, புவியியல் காரணிகள் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லோருடைய உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழங்கி நீதி, வகைப்பொறுப்பு மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சிறுபான்மை மக்களது உரிமைக்காக அணிதிரள நாம் முன்வந்துள்ளோம்.

இதற்கான ஆற்றல் முழுமையான உரிமை பொறுப்பு மற்றும் அதன் ஆக்கப்பொறுப்பு என்பன பிரஜைகளாகிய நமக்கே உரித்தானது.

பெண்களாகிய நாம் ஒரு சக்திவாய்ந்த வகைப்பொறுப்புக் கூறக் கூடிய பெண்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம். இந்த முயற்சிக்கு தோள் கொடுக்கும் உரித்து பெண்கள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் உண்டு.  இதன் பொருட்டு எங்களோடு இணைந்து செயற்பட வேண்டும் என வேண்டியுள்ளனர்.

அத்துடன் தீர்மானம் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு பெண்களை கொண்டு செல்வதற்கு முடிந்தளவு ஒத்துழைப்பினை கொடுங்கள்.  அரசியலில் பெண்களின் தொகையினை அதிகரிப்பதன் மூலம் சமூக முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒவ்வொருவரும் பங்குதாரர்களாக ஆக வேண்டும். சிறந்த தலைமைத்துவத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பெண்களை தீர்மானம் எடுக்கும் இடங்களில் முன் நிறுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த முன்மாதிரிகளை உருவாக்க முடியும். 

இதனூடாக முழு இலங்கைப் பெண்களுக்கெதிரான வன்முறைகளை அல்லது பாரபட்சங்களை குறைத்துக் கொள்ளக் கூடியதாக சிறந்த சட்டங்களையும் விஞ்ஞாபனங்களையும் உருவாக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எந்தவொரு சமூகத்திலும் ஆண்களைப்போல் பெண்களும் முதற் பிரஜைகளாவர். இலங்கைப் பெண்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்கள். அவர்களை தீர்மானம் மேற்கொள்ளும் இடங்களில் பங்காளிகளாக்குவதால் எமது நாடு சமத்துவமானதும் வன்முறையற்றதும் நிலையானதுமான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும்.

தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர்.

இலங்கையில் 52 வீதமான பெண்கள் இருந்தும் ஏன் எம்மால் 50 வீதமான பெண்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது போனது? ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 வீத இடஒதுக்கீடு செய்யுங்கள் என்ற வேண்டுகோளையும் பெண்கள் சமூகம் கேட்டு நிற்கின்றது.