கேப்பாப்புலவு கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினத்துடன் மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில் அப்பகுதியில் மக்கள் எஞ்சியுள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் என பல்வேறு தரப்பினர் இந்த மூன்று வருட நிறைவு போராட்டத்தில் பங்கேற்று இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும் பாதுகாப்புத்தரப்பும் உடனடியாக முன்னெடுக்கவேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையிலேயே கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்புப் போராட்டத்தின் மூன்று வருட நிறைவு போராட்டம் கேப்பாப்புலவு பகுதியில் நடைபெறுகின்றமை இங்கு விசேட அம்சமாக உள்ளது. யுத்தகாலத்தின்போது பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விரைவாக உரிய உரிமையாளர்களிடம் வழங்கிவிட வேண்டுமென்று ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் பாதிக்கப்பட்ட மக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட கேப்பாப்புலவு மக்களினால் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி பிலக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பயனாக அவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி அளவில் அவர்களது காணிகள் விடுவிக்கப்பட்டன. இதனையடுத்தே கேப்பாப்புலவு பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டம் கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் கூடாரங்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறெனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இப்பகுதியில் இரண்டு கட்டங்களில் குறிப்பிடத்தக்களவு காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. எனினும் இன்னும் பல ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவேண்டியுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையிலேயே தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்களின் இந்த காணிவிடுவிப்பு விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென தெரிவித்திருந்தார்.
கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீகமான காணிகளை விடுவிக்கும்படி தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக போராடி நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்கள் . இந்த மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்திலே அந்த மக்களுக்கு சொந்தமான வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியற்ற நிலையிலே யுத்தம் நிறைவடைந்து பத்து வருடகாலமாக வாழ்வதற்கான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்றார்கள் என்றும் போராட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக்கு இணை அனுசரணை வழங்கிய வேளையில் இந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்; விடுவிப்போம் என்று வாக்குறுதி வழங்கியது. ஆனால் இன்னும் இந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. யுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு நிலங்களையும் இழந்து இருக்கின்ற கேப்பாப்புலவு மக்களுக்கு அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விசேடமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் மக்களுக்கான இந்த நிலங்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் இன்னும் இந்த மக்களை நடுத்தெருவில் விடாது இந்த மக்களுக்குரிய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
காணிகளை இழந்த மக்களுக்கு எந்தளவு தூரம் அதுதொடர்பான வலி இருக்கும் என்பதை அரசாங்கமும் இந்த காணிகளை தம்வசம் வைத்திருக்கின்ற தரப்பினரும் உணர்ந்துகொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்ற மக்கள். எனவே அவர்கள் தமது சொந்த காணிகள் விடயத்தில் எந்தளவுதூரம் உணர்வுபூர்வமாக இருப்பார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் அவசியம் புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்த மக்கள் வேறுயாருடைய காணிகளையும் கோரவில்லை. மாறாக, தமது சொந்தக்காணிகள் தம்மிடமிருந்து யுத்த காலத்தில் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்தி அபகரிக்கப்பட்ட காணிகளையே விடுவிக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர். தற்போது அரசாங்கத்தினால் இந்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
விசேடமாக இந்த காணிகளுக்கு அந்த தரப்பினரிடம் உறுதிகள் இல்லை என்ற விடயம் மற்றும் அவை வேறு திணைக்களங்களுக்கு சொந்தமானவை போன்ற காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கிலிருந்து இந்த விடயத்தை மனிதாபிமான ரீதியில் ஆராயவேண்டும் என்பதே அவசியமாக இருக்கின்றது. முக்கியமாக ஒரு சரியான பொறிமுறை உருவாக்கப்பட்டு தகவல்களை உறுதிப்படுத்தி காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனினும் யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துவிடப்போகின்ற சூழலில் இன்னும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். அதுவும் சில பிரதேசங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் முற்றுமுழுதாக காணி விடுவிப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று யாரும் கூற முடியாது. காரணம், குறிப்பிடத்தக்களவு காணிகள் முன்னைய காலத்தில் விடுவிக்கப்பட்டிருந்தன. எனினும் இன்னும் அதிகமான அளவு காணிகள் விடுவிக்கப்படவேண்டியிருப்பதாகவே பாதிக்கப்பட்ட மக்களும் அந்த மக்களின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே இது தொடர்பாக சரியானதொரு அணுகுமுறையும் பொறிமுறையும் அவசியமாகின்றன. ஜனாதிபதி கோத்தபாய ராஜ
பக் ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கருத்து வெளியிட்டிக்கின்றார். மிக முக்கியமாக தாம் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஒரு திட்டத்தை வகுத்திருந்ததாகவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதனால் தற்போது இந்த காணிகளை விடுவித்து பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. எனவே விரைவாக இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளிலிருந்து போராடிக்கொண்டிருப்பதற்கு அனுமதிக்காமல் அந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். இந்த பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் தமது காணிகள் மீள தமக்கு கிடைக்கும் பட்சத்தில் அதனூடாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் புதியதொரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பது இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். அரசாங்கம் இது தொடர்பில் ஒரு ஆழமான ஆய்வை முன்னெடுத்து பொதுமக்களின் விடுவிக்க முடியுமான காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு முயற்சிப்பது முக்கியமாகின்றது.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஒரு சில காணிகளை விடுவிக்க முடியாத கட்டாய நிலைமை ஏற்பட்டால் அது தொடர்பில் பாதிக்கப் பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனையுடன் அவற்றுக்கான உரிய இழப்பீடுகளை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து சரியானதொரு மாற்று ஏற்பாடு முன்னெடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும் மிகவும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் உரிய முறையிலும் முன்னெடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என்பதை குறிப்பிட்டுக்கூற விரும்புகின்றோம்.
(03.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM