இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதற்கு விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துமாறு இணை அனுசரணை வழங்கிய நாடுகளிடத்தில் கோருவதே பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடன் காணப்படும் நடைமுறைச்சாத்தியமான வழியாகும் என்று தமிழர் இயக்கத்தின் அனைத்துலக வெளியுறவுத்துறைக்கான ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அவர் ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் வலுவற்றதொன்றாகும் என்று விமர்சிக்கப்படுகின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- தமிழர் தாயகத்தில் அரங்கேற்றப்பட்ட இன அழிப்பின் சாட்சியங்களாக இருக்கும் தமிழ் மக்களால் இந்த ஜெனீவா தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது முக்கியமானதொரு விடயம் என்ற புரிதல் எமக்கு அவசியமாகின்றது.
காரணம் நாம், இன அழிப்பு நடைபெற்றது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான சாட்சியங்களையும் கொண்டிருக்கின்றோம். அனால் 'இன அழிப்பு' நடைபெற்றது என்ற விடயம் தீர்மானத்தில் இல்லை. அதேபோன்று தான் 'தமிழ்' என்றொரு வார்த்தை கூட தீர்மானத்தில் இல்லை. அவ்வாறானதொரு தீர்மானத்தினை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்றபோது மேற்குலக நாடுகளின் வாரிசு நாடுகளாக இருக்கின்ற நாடுகளிடத்தில் தீர்மானத்தினை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றபோது இந்த தீர்மானத்தினை விடவும் வேறெந்த தீர்மானத்தினை கொண்டுவர முடியும் என்றே பதில் கேள்வியை எம்மீது நோக்கி எழுப்புவார்கள்.
ஆகவே, நாம் உரிய அணுகுமுறை ரீதியாக எமக்கு உதவியளிக்கக் கூடிய நாடுகளை நோக்கி எமது விடயங்களை நகர்த்திச் செல்லவில்லை. எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக யாருடைய கதவுகளைத் தட்ட வேண்டுமோ அவற்றை நடைமுறை ரீதியாக முன்னெடுத்திருக்கவில்லை.
ஆனால், மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கமானது, தீவிரவாதத்தினை முறியடித்து விட்டதாக உலகம் முழுக்க பிரசாரம் செய்கின்றது. உலகில் பலம்வாய்ந்த இராஜதந்திர சேவை கட்டமைப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் பன்னிரண்டு வருடங்களுக்குள் இலங்கையும் உள்ளது. அந்தப் பட்டியலில் வருவதற்கு தனது பிரசாரத்தினை இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் மற்றும் பலரைப் பயன்படுத்தி உரிய முறையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதற்கு நல்லதொரு உதாரணம் கூறுவதென்றால், ஜெனீவா தீர்மானத்தில் 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்' என்ற வாக்கியம் இடம்பெற்றிருக்கின்றபோதும் 'தமிழ் மக்கள்'என்றோ, 'தமிழ் இனம்' என்றோ, 'இன அழிப்பு' என்றோ எந்தவொரு வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆகவே நாம், நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதில் உறுதியாக நின்று அதனை தீர்மானங்களில் உள்ளீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இலங்கை அர சாங்கம் ஒருபோதும் ஜெனீவா தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக அல்லது கண்துடைப்புக்காக வேண்டுமானால், இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் எந்தவொரு விடயங்களையும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் சர்வதேசத்திடம் செல்லப்போகின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கலாம்.
கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஊடாக இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக காணப்பட்ட வாய்ப்புகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் தவறவிட்டுள்ளார்களா?
பதில்:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆணையாளரின் அறிக்கை தயாரிக்கப்படுகின்றபோது பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழமையான விடயமாகும். இது காலம்காலமாக இருந்து வரும் ஒரு ஒழுங்காகும்.
அந்த வகையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 43ஆவது கூட்டத்தொடருக்கான ஆணையாளரின் அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு கடந்த ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து தரப்பினரிடத்திலிருந்தும் சமர்ப்பணங்களை செய்வதற்கு இயலுமாக இருந்தது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட நீதியை எதிர்பார்த்திருக்கும் தரப்பினராகிய தமிழர்கள் அநீதிகள், குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை தொடர்பான ஆதாரங்களுடன் சமர்ப்பணங்களை அக் காலப்பகுதியில் செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால் ஆணையாளரின் வாய்மூல அறிவிப்பில் அதுபற்றிய கரிசனைகளும் அறிக்கையில் அவ்விடயங்கள் தொடர்பான பதிவுகளும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமன்றி அந்தப் பதிவுகள் பொதுச்சபை வரையில் பிரதிபலிப்பவையாகவும் இருக்கும். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் சரியாக செயற்படவில்லை. குறிப்பாக தாயகத்தில் இது பற்றிய கரிசனையானது போதுமானதாக இருக்கவில்லை.
ராஜபக் ஷவின் ஆட்சி அமைந்ததன் பின்னர் தென்னிலங்கையைச் சேர்ந்த பல அமைப்புகள் பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி ஆணையாளரின் அலுவலகத்துக்கு எழுத்துமூலமான சமர்ப்பணங்களை செய்திருக்கின்றன. குறிப்பாக மனித உரிமை மீறல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்கள் பற்றியே அச்சமர்ப்பணங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர் தரப்பிடத்திலிருந்து 25வரையிலான அளவிலேயே எழுத்துமூலமான சமர்ப்பணங்களே கிடைத்திருக்கின்றன.
எமது தரப்பிலிருந்து 200இற்கும் அதிகமான சமர்ப்பணங்களை செய்திருந்தோம். பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு அதிகமான சமர்ப்பணங்களை செய்யாமையானது மிகப்பெரும் பின்னடைவாகும். தமிழர் தரப்புக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உயிர்ப்புடன் சர்வதேச அரங்கில் வைத்திருப்பதற்கு இந்த சமர்ப்பணங்கள் இன்றியமையாதவையாக காணப்படுகின்றன.
கேள்வி:- இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வேறு வழிகள் ஏதும் உள்ளனவா?
பதில்:- ஆம், ஐ.நா கட்டமைப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர், சிறுவர் உரிமைகள், பெண்கள், 19 வேறுபட்ட சமவாயங்கள் காணப்படுகின்றன. இதில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் கைச்சாத்திட்டிருக்கும். இந்த சமவாயங்கள் ஒவ்வொன்றும் நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஒருதடவை மீளாய்வு செய்து அறிக்கைகளை தயாரிக்கும். அச்சமவாயங்களின் கீழ் காணப்படும் விடயப் பரப்புகளை மையப்படுத்தி தமிழர் தரப்பான நாம் சான்றாதாரங்களை அவற்றுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குகின்றபோது அச்சமவாயங்களின் அறிக்கைகளில் எமது விடயங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
இதனைவிடவும், விசேட நிபுணர் அறிக்கை அல்லது விசேட குழு அறிக்கை என்ற கட்டமைப்பும் காணப்படுகின்றது. இந்தக் கட்டமைப்பில் 39பிரிவுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுகளும் ஆண்டுதோறும் அறிக்கைகளை சமர்ப்பித்தவாறே இருப்பார்கள். அத்தரப்பினருக்கும் தமிழர்களின் விடயங்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருக்கின்றபோது அவர்களும் தமது அறிக்கையினுள் தமிழர் தரப்பின் விடயங்களை நிச்சயமாக உள்ளீர்ப்பார்கள்.
அது சர்வதேசத்தில் தமிழர்களின் விடயத்தின் மீதான கரிசனையை அதிகரிக்கச் செய்யும். இவ்வாறான விசேட பிரிவுகள் அமைக்கப்பட்டு 12வருடங்களாகின்ற நிலையில் இலங்கையிலிருந்து முழுமையான விடயப்பரப்பினைக் கொண்ட 152 விடயங்களே தற்போது வரையில் பதிவாகியிருக்கின்றன.
கேள்வி:- ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்திருக்கின்றதே?
பதில்:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சரி, ஐரோப்பிய ஒன்றிய கூட்டங்களிலும் சரி காலம்காலமாக இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாடுகளையே பின்பற்றி வந்திருக்கின்றன.
குறிப்பாக ஐரோப்பிய தீர்மானங்களின் போது தாம் அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றே முதலில் கூறுவார்கள். அதற்காக சிங்கள தரப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயன்படுத்துவார்கள்.
பின்னர் தீர்மானங்கள் கடுமையாக அமையப்போகின்றன என்பதை உணர்ந்ததும் உடனடியாக இலங்கையிலிருந்து வருகைதரும் பிரதிநிதிகள் வாக்குறுதிகளை வழங்கி இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதாக கூறிச் செல்வார்கள். இவ்வாறு தம்மீது வருகின்ற அழுத்தங்களை முறியடிப்பார்கள்.
அதேபோன்று தான் ஜெனீவா அரங்கிலும் ஆரம்பத்தில் தீர்மானங்களை எதிர்த்து 25கிலோகிராம் எடையுடைய ஆவணங்களைக் கூட சமர்ப்பித்திருந்தது. அதில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உலக வங்கியிடத்தில் பணத்தினை பெறுவதையும் நோக்கமாக கொண்டே இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டது.
இவ்வாறு தான் ஒவ்வொரு தடவையும் தீர்மானங்கள் வருகின்றபோது இலங்கை அரசாங்கத்தின் அணியினர் வருகை தந்து வாக்குறுதிகளை வழங்கிச் செல்வார்கள். குறிப்பாக இறுதியாக நடைபெற்ற ஜெனீவா அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இலங்கை அரசாங்கமே இணை அனுசரணை வழங்கியிருக்கின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
மாறாக, தன்னிடத்தில் உள்ள முன்னாள் சிவில் சேவை பிரதிநிதிகள், இராஜதந்திர செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் என்று அணியொன்றை தயார் செய்து அவர்கள் ஊடாக ஜெனீவா அரங்கில் முறியடிப்புகளை மேற்கொள்கின்றது. இந்தப் போக்கு தான் தற்போது வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆகவே, தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்திய நகர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை.
கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்களை ஏற்படுத்தவல்ல உடனடி சாத்தியமான வழிமுறை ஏதும் உள்ளதா?
பதில்:- இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்ட 30/1 உள்ளிட்ட தீர்மானங்கள் இலங்கை உட்பட மேற்குல நாடுகளின் இணை அனுசரணையுடனேயே நிறைவேற்றப்பட்டது. ஆகவே, இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் ஊடாக விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துவதற்குரிய அழுத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் எந்தவொரு பொறிமுறைக்கும் இணங்குவதற்கு மறுத்துள்ள நிலையில் இலங்கை விடயத்தினை கையாளும் அல்லது தலையீடு செய்யும் மேற்குலக நாடுகள் உடனடியாக விசேட கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதற்கான உந்துதலை பாதிக்கப்பட்ட தரப்பினரும், தாயக, தமிழக, புலம்பெயர் தரப்புகளும் கூட்டிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, 2017, 2018ஆம் ஆண்டுகளில் சிரியா, ரோஹிங்கியா மக்களுக்காக விசேட கூட்டத்தொடர்கள் நடத்தப்பட்டன. மேலும், அந்த மக்களை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தியே பிரச்சினைகளும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், இலங்கை தமிழ் மக்களின் பெயரினை நேரடியாக குறிப்பிட்டு இதுவரையில் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்படவில்லை. அதாவது இலங்கை தமிழர்கள் மீது இன அழிப்பு செய்யப்பட்டது, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டன என்று நேரடியாக குறிப்பிடப்படாமை துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும். ஆகவே, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று அதனை வலியுறுத்த மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:- இலங்கை அரசாங்கம் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாத நிலையிலும் அதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையின் சீனா, ரஷ்யாவின் ஆதரவு இருக்கின்ற நிலையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றினை நோக்கி நகர்வது சாத்தியமாகுமா?
பதில்:- ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நோக்கி இலங்கையை நகர்த்துவது கடினமாக இருக்கின்றது. அதேநேரம் இலங்கை அரசாங்கம் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாமையின் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தமுடியாது என்ற வாதம் தவறானது. காரணம் சர்வதேச நீதிமன்றை நோக்கி இலங்கையை கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பினராகிய நாம் இதுவரையில் சரியாக கையாளவில்லை.
குறிப்பாக இனப்படுகொலை, மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் உள்ளிட்டவை தொடர்பிலான சாட்சியங்கள் முறையாக தொகுக்கப்பட்டு அவற்றை பொது வழக்கறிஞர் ஒருவர் ஊடாக 'ஹேக்கில்' உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான பிரிவுக்கும் அதேநேரம் சாட்சியங்கள், வாழும் நாடுகளின் நீதித்துறையின் ஊடாக தாக்கல் செய்ய வேண்டும்.
இதனையடுத்து குறித்த பிரிவின் ஊடாக உரிய நாடுகளுக்கு அந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விளக்கங்கள் கோரப்படும். அதில் முரண்பாடுகள் ஏற்படுகின்றபோது விசாரணைகள் இயல்பாகவே முன்னெடுக்கப்படும். ஆகவே, தாயகத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலான முழுமையான சாட்சியப்பதிவுகளே அவசியமாக இருக்கின்றன. இதற்கு ஆகக்குறைந்தது தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் தலா ஐவர் வீதம் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது.
கேள்வி:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்வது குறித்து பாதிக்கப்பட்ட மக்க ளின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளுடன் முதற்தடவையாக பேச்சுக்களை நடத்தி
யிருக்கின்றமையை எவ்வாறு பார்க்கின் றீர்கள்?
பதில்:- பாதிக்கப்பட்ட மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் நடை பெற்ற கூட்டத்தொடர்களில் ஏனைய தரப்புகளின் முடிவுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் வலியுறுத்தல்களுக்கும் மாறான நிலைப்பாடுகளையே கொண்டிருந்தது. குறிப்பாக இலங்கை
யில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நாம் உள்ளிட்டவர்கள் வலி யுறுத்தியபோது கூட்டமைப்பு தயங்கி நின்றது. ஏறக்குறைய அரசாங்கத்துக்கு ஏதுவான போக்கிலேயே இருந்தது.
இவ்வாறான நிலையில் தான் தற்போது உறுப்பு நாடுகளிடத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது பற்றி பேசியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். உண்மையிலேயே இருவாரங்களுக்கு முன்னதாக இங்கு
வருகை தந்திருந்த அவர் சந்திப்புகளில் ஈடுபட்டதாக கூறி ஊடக விளம்பரத்தினையே செய்திருந்தார். இதுவரையில் அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியது கூட கிடையாது. ஆகவே, அவர்கள் வெறுமனே வாக்குகளை இலக்காக வைத்து இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்தபோது சுமந்திரன் கூறியதன் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து உறுப்பு நாடுகளிடத்தில் பேச்சுக்களை நடத்தியிருந்தால் எந்தவொரு உறுப்பு நாடும் அந்த விடயத்தினை ஏன் ஒரு இடத்தில் கூட பிரதிபலிக்கவில்லை. ஆகவே, அவருடைய கருத்துகள் அடுத்த தேர்தலை மையப்படுத்தியதே ஆகும்.
ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM