'அரசியலில் இதெல்லாம்...' என்பது திரைப்படமொன்றில் பேசப்பட்ட வசனம். இவ்வசனம் மீண்டும் மீண்டும் பலராலும் பேசப்பட்டு வருகிற பிரபல்யம் பெற்ற கூற்றுங்கூட. அரசியலில் யாரும் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது எதிரியும் கிடையாது. இவ்வசனமும் அரசியல் பிரமுகர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்படுகின்ற வரிகள். இப்பொழுது இந்த இரு சினிமா வசனங்களையும் ஒரு செய்திக்கு பிரயோகித்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி போன்ற ஜனநாயக சக்திகள் மற்றும் சமூகக் குழுக்களுடன் ஓரணியாக நின்று அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பலம் பொருந்திய அணியாக இவ்வணியை உருவாக்குவோம். இக்கூட்டு, பலம் பெறவும் சேதம் இல்லாத விட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29 ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த உரையின்போது மேலும் ஓர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் தலைவர் ஹக்கீம். சிறுபான்மைக் கட்சிகளை ஓரங்கட்டும் ஒரு தீவிர முயற்சி தற்போதைய அரசாங்கத்தில் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து மீட்சி பெற்று எம்மை உறுதி செய்து கொள்வதற்காக மூன்று கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய காலத்தின் கட்டாய சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது என்ற தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார்.
ஹக்கீமின் இந்தக் கருத்தானது காலத்தை மையமாகக் கொண்டது மாத்திரமல்ல, பொருத்தமான நோக்கை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் அவர் தன்னையொரு தேசிய தலைவராக நிரூபித்துள்ளார் என்பது பாராட்டுதலுக்குரிய விடயமாகும். புதிய அரசாங்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், முன்நகர்வுகள் அனைத்துமே நாட்டில் வாழும் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை உதாசீனம் செய்து ஒரு பெளத்த மேலாதிக்க அரசாங்கத்தை நாட்டில் நிரந்தரமாக உருவாக்குவதையே தீவிரமாகக் கொண்டுள்ளனர் என்பதை கடந்த நூறு நாள் பயணிப்பிலும் நடத்திக் காட்டியுள்ளனர் என்பது வெளிப்படையாகவே பேசப்படுகின்ற விடயம்.
ஜனாதிபதியின் பதவியேற்பு உரை, சுதந்திர தின நிகழ்வு என்பவற்றுடன் அவரின் செயல்முறை அனைத்துமே சிறுபான்மை சமூகமற்ற ஒரு பெளத்த சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியைப்போல் தன்னை பாவனை பண்ணிக்கொண்டு நடந்து கொள்வது நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனத்தவர்களுக்கும் கவலையளிக்கின்றது. ஹக்கீமின் இந்த வெளிப்படுத்தலானது பின்வரும் எதிர்கால நிலைமைகளையும் போக்குகளையும் கவனத்திலும் கருத்திலுங் கொண்டே, அனுபவ ரீதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவையாவன: நடைபெறவுள்ள பொதுத்தேர்தலானது சிறுபான்மை சமூகத்துக்கு பாரிய சவாலாக இருக்கப்போகிறது. இன்றைய அரசாங்கம், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுமாக இருந்தால் அது நாட்டுக்கு பேராபத்தாக வந்து முடியும். சிறுபான்மை சமூகம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க வேண்டுமாயின் அவர்கள் மத்தியில் ஒரு பலமான கூட்டு உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கப் போகிறது என்ற பயம் காட்டப்படுகிறது. கட்சியிலிருந்து பிரிந்து போனவர்களை எம்முடன் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறேன் என பல்நோக்கு இலக்குக் கொண்ட அறை கூவலை விடுத்துள்ளார்.
இதில் ஹக்கீமின் முதலாவது கருத்து முன்வைப்பானது, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது சிறுபான்மை சமூகத்துக்கு பாரிய சவாலாக இருக்கப் போகிறது என்ற விடயமாகும். இதில் ஆழமான உண்மைகள் சொல்லப்படுகிறது என்பது ஏதோவொரு வகையில் உண்மையாகவே பார்க்கப்படவேண்டும். வடகிழக்கை பொறுத்தவரை, மக்களால் அறியப்பட்ட கட்சிகளாகவும் செல்வாக்கு கொண்ட கட்சிகளாகவும் காணப்படுபவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுமாகும். அந்த வகையில் இவற்றின் ஆளுமையையும் செல்வாக்கையும் உடைக்க வேண்டுமென்பதற்காக திட்டமிடப்பட்ட வியூகங்கள் வகுக்கப்படுகின்றன என்பது ரகசியம் கலந்த உண்மையாகும்.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைத்து விடுவதன் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கைகளை நிர்மூலமாக்கி விடமுடியுமென்பதுடன் சர்வதேச ரீதியாக அரசாங்கத்துக்கு எழும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியுமென்று அரசாங்கம் மனப்பால் குடிக்கிறது. இதன் அடிப்படையிலேயே அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்;செயற்படப் பார்க்கிறார்கள் என்பதை கூட்டமைப்பின் தலைவர்கள் பல தடவைகள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை கூட்டமைப்பு கடந்த ஏழு சகாப்த காலத்துக்கு மேலாக கூறி வருவதுடன் போராடியும் வருகிறார்கள். அது மட்டுமன்றி, சர்வதேசமயப்படுத்தி வலியுறுத்தியும் வருவது சகலரும் அறிந்த விடயம். இவ்வாறானதொரு போராட்டத்தை மூடி மறைத்து அதை இல்லாது ஒழிக்கும் முயற்சியில் கடுமையாக உழைத்து வரும் இன்றைய அரசாங்கம் கூட்டமைப்பின் பலத்தை உடைக்க வேண்டுமாயின், அதன் பாராளுமன்ற பலத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டதாக காணப்படுவதன் காரணமாகவே பல விடயங்களில் தந்திரோபாயமாக காய்களை நகர்த்தப் பார்க்கிறது.
முஸ்லிம் சமூகத்தை சிறை பிடித்து வைத்திருப்பதற்கு ஒரு விவகாரமாக பயன்படுத்தப்படுவது ஏப்ரல் தாக்குதல் சம்பவமாகும். இவற்றை சாட்டாக வைத்துக்கொண்டே முஸ்லிம் சமூகத்தையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் பலவீனப்படுத்தப் பார்ப்பது மட்டுமல்ல, ஓரங்கட்டுவதற்கான கடுமையான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலானது இவ்விரு கட்சிகளுக்கும் பாரிய சவாலாக இருக்கப்போகிறது என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.
கடந்த தேர்தல் காலங்களில் கூட்டமைப்பு மாற்றுத் தரப்பினருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலையொன்று உருவாகவில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகளுடனும் சகோதர தரப்பினர்களுடனும் இணைந்து போட்டியிட்ட நிலைமை இருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் தேசியக் கட்சிகளின் சின்னத்துக்குள் முடங்கிப்போன காலமும் உண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பழைய நிலைமைகளை ஏற்றுச் செல்வது என்பது ஆபத்தானதென உணரப்பட்டிருப்பதனாலேயே தலைவர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டை விரும்பும் உடன்பாட்டுக்கு வந்திருப்பது இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தே.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இந்த விரிவான பார்வை வரவேற்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும் அதில் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகளையும் ஆராய வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பலமுள்ள ஜனநாயக சக்தியொன்று உருவாக்கப்படவேண்டுமென தலைவர் கூறியிருப்பது காலத்தின் தேவை மாத்திரமன்றி, பாராட்டுக்குரிய விடயமுமாகும். ஆனால் இந்த கனவு நிறைவேறுமா? பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது கடுமையான கேள்வி மாத்திரமல்ல, கஷ்டமான எதிர்பார்ப்புமாகும்.
ஹக்கீமின் பகிரங்கமான இந்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணியினர் உடனடியாகவே மறுத்து அறிக்கையொன்றை மறுநாளே விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது முஸ்லிம் காங்கிரஸுடனோ இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை ஜே.வி.பி அவதானம் செலுத்தவில்லை. அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் நாமுமில்லை. பொதுத் தேர்தலில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிலேயே நாம் போட்டியிடுவோம் என அடித்துக் கூறியுள்ளனர்.
ஜே.வி.பியின் இந்த அறிக்கையின் மூலம் சில அவதானிப்புகளை எம்மால் சுட்டிக் காட்ட முடியும். சிறுபான்மைக் கட்சிகளை கூட்டிணைக்கும் முயற்சியில் அவர்கள் எக்காலத்திலும் உடன்பாடு காட்டவில்லை என்பது ஒரு புறமிருக்க, பெரும்பான்மையளவில் சிங்களப் பிரதேசத்தையும் சிங்கள வாக்காளர்களையும் நம்பியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் சமஷ்டி முறையிலான சுயாட்சி கோரும் கூட்டமைப்பும் ஏப்ரல் பயங்கரவாதிகள் என பெளத்த அடிப்படைவாதிகளால் ஓரங்கட்டப்பட்டு வரும் முஸ்லிம் மக்களை ஆதரவாளர்களாகக் கொண்ட முஸ்லிம் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்கக் கூடிய புரட்சிமயமான கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி மாற்றுநிலை பெற்றிருப்பதாக இன்னும் நம்பப்படவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில், மக்கள் விடுதலை முன்னணி அக்கூட்டுக்கு உடன்படுமாக இருந்தால் மிக மகிழ்ச்சியோடு கைநீட்டி வரவேற்கப்பட வேண்டிய பாரிய மாற்றமாகவே வரலாறு நினைத்துக் கொள்ளும். அதுவுமின்றி, நாட்டில் மிகக் குறைந்தளவு ஆசனங்களையே சுவீகரித்துக் கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி அடுத்த பாராளுமன்றில் ஆகக் குறைந்தது ஒரு எதிர்க்கட்சியாகவாவது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமாயின், மிக சாதுரியமாகவும் சாணக்கியமாகவுமே நடந்துகொள்ள எத்தனிக்கும்.
கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் ஒரு கூட்டு உடன்பாடு ஏற்படுமா என்பது இன்னுமொரு சந்தேகத்துக்குரிய கேள்வி. அவ்வாறு நடக்குமாக இருந்தால் அந்த மாற்றம் சாதனைப் புத்தகத்து பதிவுகளாக மாறும் என்பது ஆச்சரியத்துக்குரிய விடயந்தான். காரணம் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு இது பார்க்கப்பட வேண்டிய விடயம். உதாரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் வந்ததன் பின் இரு கட்சிகளுக்கிடையிலான உடன்பாடு கள் கடுமையான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. முடிவு கசப்பானதாகவேயிருந்தது. 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டதன் காரணமாக கிழக்கு மாகாண ஆட்சியில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன. 11 கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் கூட, முதலமைச்சர் கதிரையை முஸ்லிம் காங்கிரஸ் தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது என்ற ஆதங்கம் கொண்டவர்களாகவும் அதிருப்திபட்டவர்களாகவும் கிழக்கு தமிழர்கள் காணப்பட்டார்கள். இந்த அரசியல் சக்கரத்தினால் கூட்டமைப்பு பல விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாக்கப்பட்டது.
இவை ஒருபுறமிருக்க, கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த இந்த அரசியல் சக்கரம் காரணமாகவே பல அமைப்புகளும் ஒரு சில கட்சிகளும் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக காரணங்களாக அமைந்தன. இது தவிர, முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுக்கு வந்து கூட்டணியொன்று உருவாகுமாக இருந்தால் அது வரவேற்கக்கூடிய நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் யதார்த்தத்தில் தேர்தல் களத்தில் பல போட்டிகளும் பிரச்சினைகளும் வெடிக்கக் காரணமாகலாம். உதாரணமாக வன்னித்தேர்தல் தொகுதி, திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டம் போன்ற மாவட்டங்களில் எதை விட்டுக்கொடுத்து எதைப் பெறுவது, எக்கட்சியை முன்னுரிமைப்படுத்துவது விட்டுக்கொடுப்பது என்பதில் எல்லாம் பாரிய சங்கடங்களையே உருவாக்கும்.
வடக்கைப் பொறுத்தவரை கூட்டணி எளிமையான வாய்ப்பாடு கொண்டதாக அமையலாம். ஆனால் கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களைப் பொறுத்தவரை பாரிய சவால் நிலைகளை உருவாக்கும் என்பது தெளிவாக தெரியும் விடயம். அதுவுமின்றி கூட்டமைப்பை பொறுத்தவரை, இம்முறை தேர்தலில் தன்னை ஒரு பலமுள்ள சக்தியாக மாற்ற வேண்டிய தேவை உருவாகியுள்ளது. அது எவ்வாறெனில், வடகிழக்கிலுள்ள கூடுதல் ஆசனங்களை தமதாக்கிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பெறக்கூடிய தேசியப் பட்டியல் ஆசனங்களை சுதாகரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான சூழலில் கூட்டணி அமைத்து பெறுவது என்பது சாத்தியமான விடயமா என்பதை ஆழ்ந்து யோசிக்கவே செய்யும்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம், மூன்று கட்சிகள் சேர்ந்து ஒரு பலமான கூட்டணியை அமைப்போம் என்று கூறியிருப்பதுடன் இதற்காக எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் தானும் தனது கட்சியும் தயாராக இருப்பதாக கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையை மாத்திரமல்ல ஓர் உத்தம தலைவருக்குரிய சிறப்பாண்மையை எடுத்துக் காட்டுகிறது.
ஆனால், இந்த விடயம் இரு சமூகத்தின் நன்மை சார்ந்தது மட்டுமல்ல அடிப்படைப் பிரச்சினை சார்ந்ததுமாகும். இவ்விரு சமூகமும் ஏற்றுக் கொள்வது தவிர்த்து பல விட்டுக்கொடுப்புகளுக்கும் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த கால கசப்பான அனுபவங்கள் இரு சமூகத்துக்கு மத்தியிலும் பாரிய உடைவு நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒருசில தலைவர்களின் இனத்துவமான நடவடிக்கைகள் காரசாரமான முரண்பாடுகளுக்கு காரணமாகியிருந்துள்ளன. இந்த கசப்பு நிலை மாற்றப்பட வேண்டும். அந்த மாற்றத்துக்கான ஒரு கதவு திறக்கப்படுவதாகவே இது இருக்கலாம்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று சிங்களப் பெரும்பான்மையுடன் ஓர் ஆட்சி அமைக்கப்பட வேண்டுமென்பதில் இன்றைய அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியினர் அடுத்த தேர்தலில் 90 க்கு மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைப்போமென சூளுரைத்து வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த எதிர்பார்ப்பு எந்தளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையே உள்ள இழுபறிகளுக்கு முடிவு காணப்படவில்லை; முரண்பாடுகளும் தீர்ந்தபாடில்லை. இத்தகைய சூழலில் வெறும் எதிர்பார்ப்புகளாலும் வாய்ச்சவடால்களாலும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. அவ்வாறு வெற்றி பெற்றாலும் இவர்களுடன் ஒன்றுகூடி பாராளுமன்றை ஆட்சிப்படுத்தக்கூடிய இணைத்தரப்பினர் அல்லது கூட்டுத்தரப்பினர் யார் என்பதில் பல சங்கடங்களே காணப்படுகின்றன.
உதாரணமாக தமது நாலரை வருட ஆட்சியையும் அவமே கழித்து விட்டு ஒன்றையுமே செய்ய முடியாமல், செய்யத் தெரியாமல் ஆட்சியை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு சிறுபான்மைக் கட்சிகள் தயாரா என்பது கேள்விக்குரியதே. அதுவுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான முயற்சியாக அரசியல் சாசன முயற்சிக்காக கடுமையாக முயற்சி செய்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கவனமின்மை காரணமாகவே அம்முயற்சி தோல்வி கண்டது என்ற அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுக்க தமிழ்த்தலைமைகள் முன்வரமுடியுமா? மறுபக்கம் ஏப்ரல் தாக்குதல் காரணமாக நொந்து நொடிந்து போன முஸ்லிம் மக்களை இக்கட்சி கைவிட்டு விட்டது என்ற அபிப்பிராயம் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேரூன்றிக் காணப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் உடன்பட்டுப்போக வாய்ப்புண்டா என்பது முஸ்லிம் மக்கள் பக்கமாக நின்று பார்க்கப்பட வேண்டிய விடயம்.
எவை எவ்வாறிருப்பினும், இன்றைய அரசாங்கம் தான் எதிர்பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அதிஷ்டவசமாகப் பெற்றுக்கொள்ளுமாக இருந்தால் அதனால் எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளக்கூடிய பாரிய சவால்கள் தொடர்பில் எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விவகாரங்கள் பற்றியோ 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவது தொடர்பிலோ மூச்சு விட முடியாத அபத்தமான சூழ்நிலையொன்று உருவாகுமென்பதை இன்றைய போக்கிலிருந்தே கற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நூறு நாட்களை தாண்டிவிட்டபோதும் தமிழ்த் தரப்பினரை அழைத்து ஜனாதிபதி பேசுவார் என அவர்கள் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றபோதும் அந்த எதிர்பார்ப்பு இம்மியளவும் சாதகமான வாய்ப்பைக் கொண்டுவரவில்லை. அண்மையில் இந்தியாவுக்கு சென்று வந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கருத்து தெரிவிப்புகள் எவ்வளவு கடுமை யானது என்பதை தமிழ்த் தலைமைகள் அறியாததல்ல. இதேவேளை, மாகாண சபை முறைகளை பலப்படுத்துவதன் மூலம் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவோமென மேற்படி இருவரும் தமது கருத்தாக தெரிவித்தாலும், இன்றைய ஆட்சியில் மாகாண சபை முறைக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற பயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதுவுமன்றி, கடந்த நான்கு வருடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாழாக்கிவிட்டது. அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தேடித்தரவில்லையென்ற ஆழமான கோபங்கள் இப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
முஸ்லிம் தலைமைகளைப் பொறுத்தவரை அவர்கள் இன்று திரிசங்கு நிலையிலேயே காணப்படுகிறார்கள். அங்கும் செல்ல முடியாமல் இருக்கும் சேரமுடியாமல் தளம்பிக் கொண்டிருக்கும் நிலையில் தான் எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்கள். ஒரு காலத்தில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவற்றுடன் சேர்ந்து தகுதியான பதவிகளை அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு தமது சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளை செய்து வந்துள்ளனர். இந்த விடயத்தில் தமிழ்த் தலைமைகள் கவனம் காட்டவில்லை என்பது தமிழ் மக்களி பெரும் கவலையாகவும் இருந்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் தேர்தலின் பின் மீண்டுமொரு வாய்ப்பும் வசதியும் வரமுடியுமா என்ற கவலை முஸ்லிம் சமூகத்திடம் இல்லாமலில்லை. காரணம் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டு சொல்வது போல் இன்றைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை ஓரம் கட்ட நினைப்பது மாத்திரமன்றி நிர்மூலமாக்க நினைக்கிறதென்பதற்கு பல உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு தொடர்பாக சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் பிரிந்து நிற்க வேண்டும். தமது வாக்குகளை இரு பக்கமும் பிரித்து வழங்க வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தை எச்சரித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
எவ்வாறிருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ எதிர்வரும் பொதுத் தேர்தலானது சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரை பாரிய சவாலும் போராட்டமும் கொண்டது என்பதை மறுத்துக் கூறமுடியாது. இவ்வாறானதொரு அபத்தமான சூழ்நிலையில் சிறுபான்மைத் தரப்பினர் சிந்தித்து தூரநோக்குடன் செயற்பட வேண்டியது அவசியமானது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டு தீர்மானத்துக்கு வரவேண்டுமென ஒரு சாரார் அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். அதேபோன்றே முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஒன்றுகூட வேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்த் தரப்பினரைப் பொறுத்தவரை அம்முயற்சி ஆகாய தாமரையாகவே இருக்கப் போகிறது. காரணம் நாளுக்கு நாள் புதிய புதிய கட்சிகளின் தோற்றம், அமைப்புகளின் உருவாக்கம் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான கோரிக்கையையும் தத்துவத்தையும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து மீட்சி பெறுவது என்பது இந்த நூற்றாண்டில் மாத்திரமல்ல எத்தனை நூற்றாண்டு சென்றாலும் ஆகப்போகிற காரியமில்லை. ஆனால், எதிர்கால சிறுபான்மை மக்களின் நலன்கருதி பலமுள்ள ஓர் ஒற்றுமையும் கூட்டும் உருவாக வேண்டுமென்பதை சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
திருமலை நவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM