மனித உரிமை ஆணையாளரின் உரையின்போது அவர் திடீரென இலங்கையின் மாற்று யோசனையை நிராகரிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கவலை தெரிவித்துவிட்டு பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்கவேண்டும் என்றே மிச்செல் பச்லட் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இலங்கையின் விசாரணை ஆணைக்குழு யோசனையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிராகரித்திருந்தார். இது விவாதம் நடைபெற்ற போது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஐக்கியநாடுகள் பேரவை வளாகம் வியாழக்கிழமை பிற்பகல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் இலங்கை மனித உரிமை நிலைமை, மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவிருந்தமையினால் அனைவரும் தமது அறிக்கைகள் ஆவணங்களுடன் மனித உரிமைப் பேரவை சபாபீடத்திற்குள் சென்றுகொண்டிருந்தனர். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினரும் ஜெனிவா நேரப்படி 3.00 மணி ஆகும்போதே சபைக்குள் சென்று அமர்ந்துகொண்டனர்.
அத்துடன் பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பாகிஸ்தான், செக்குடியரசு, உள்ளிட்ட மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களும் பேரவைக்குள் இலங்கை குறித்த விவாதத்திற்கு தயாராக இருந்தனர். முதலில் விவாதத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் இலங்கையின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றியதன் பின்னர் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளும் உரையற்றியிருந்தன. இலங்கை தொடர்பான விவாதமானது விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் பரபரப்பாக நடைபெற்றது. யாரும் எதிர்பார்க்காதவகையில் பல்வேறு அறிவிப்புக்களும் இந்த விவாதத்தின்போது வெளியிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
முதலில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இலங்கையின் புதிய மாற்று யோசனையை முழுமையாக நிராகரித்ததுடன் இலங்கை பிரேரணை அனுசரணையிலிருந்து விலகியமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் குறிப்பிடுகையில்,
“அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மனித உரிமை விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றை அறிவித்துள்ளமை தொடர்பில் நான் கவலையடைகின்றேன். பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். அரசாங்கமானது அனைத்து மக்களினதும் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களின் தேவைகள் குறித்து செயற்படவேண்டும். தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வைராக்கிய பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதைக் காண்கின்றோம். கடந்த கால மனித உரிமை மீறல்களுக்காக தண்டனை வழங்கப்படாத கலாசாரம் தொடர்கின்றமை மிக அடிப்படை பிரச்சினையாக இருக்கின்றது. பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. மற்றுமொரு விசாரணை ஆணைக் குழு நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் நான் இணங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.
மனித உரிமை ஆணையாளரின் உரையின்போது அவர் திடீரென இலங்கையின் மாற்று யோசனையை நிராகரிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கவலை தெரிவித்துவிட்டு பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்கவேண்டும் என்றே மிச்செல் பச்லட் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இலங்கை யின் விசாரணை ஆணைக்குழு யோசனையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிராகரித்திருந்தார். இது விவாதம் நடைபெற்ற போது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பாக உரையாற்றுவதற்கு ஏற்கனவே ஆவணங்களுடன் தயாராக இருந்தனர். எனினும் மனித உரிமை ஆணையாளர் பச்லட் இலங்கையின் யோசனையை நிராகரித்ததையடுத்து அவர்களும் தமது இலங்கை தொடர்பான நிலைப்பாட்டு ஆவணங்களை மீளாய்வு செய்ததாகவே தெரிந்தது.
இலங்கையின் தீர்மானம்
ஆணையாளரின் நிராகரிப்பை இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் எதிர்பார்க்கவில்லை. எனினும் ஆணையாளர் மிச்செல் பச்லட் உரையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிடுகையில்,
“30/1 மற்றும் 40/1 போன்ற பிரேர ணைகளுக்கான அனுசரணையிலிருந்து அரசாங்கம் விலகினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். அபிவிருத்தி நிரந்தர சமாதானம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் நாங்கள் ஐ.நா. வுடன் இணைந்து பணியாற்றுவோம்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிக மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்துள்ளார். அனுசரணையிலிருந்து விலகினாலும் உள்ளக ரீதியில் இந்த பிரச்சினைகளை ஆராயத் தயாராக இருக்கின்றோம். கால அட்டவணையுடன் செயற்படுவோம். கடந்த நான்கரை வருடங்களாக 30/1 பிரேரணை இழுத் தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்களே கடந்துள்ளன. மனித உரிமை பேரவை எமது மக்கள் வழங்கியுள்ள ஆணையை கவனத்தில் எடுக்கவேண்டும். ராணுவ தளபதி ச ேவந்திர சில்வா மீது சில நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளமை இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். நாம் தொடர்ந்து அவருக்காக முன்நிற்போம். சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக் கின்றோம். முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தப்படும்.
13 ஆவது திருத்தத்துக்கு அமைய வடக்கு மக்களுக்கு வாக்குரிமையை 25 வருடங்களுக்கு பின்னர் நாங்களே வழங்கினோம். விரைவில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெறும். காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளது. இழப்பீடும் வழங்கப் படும். உயர்நீதிமன்ற நீதி யரசரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது உரையில்,மனித உரிமை ஆணையாளரின் நிராகரிப்பு தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடாத போதிலும் வேறுபல முக்கிய விடயங்களை முன்வைத்திருந்தார். விசேடமாக நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் அடைய இலங்கை இணைந்து பயணிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டமை முக்கியத்துவமிக்கதாக அமைந்தது.
அதுமட்டுமன்றி காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார். இந்த விடயமும் முக்கியத்துமிக்கதாக அமைந்தது. காரணம் 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகியதுடன் காணா மல்போனோர் அலுவலகம் ரத்து செய்யப்பட்டுவிடுமா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என்று தெரிவித்திருந்தார். முன்னதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பச்லட்டின் உரையின்போது காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகம் என்பன அரசியல் ரீதியில் பலப்படுத்தப்படவேண்டுமென தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விவாதத்தில் பதில ளித்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் என்று தெரிவித்திருந்தமை சபையில் அனைவரது கவனத்தை ஈர்த்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியம்
தொடர்ந்து உறுப்பு நாடுகள் உரை யாற்றின. முதலாவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி குறிப்பிடுகையில்,
“இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து பணியாற்றவேண்டும். பொறுப்புக்கூறலில் ஒரு செயற்பாட்டு திட்டத்தை இலங்கை முன்வைப்பது கட்டாயமாகும். பொறுப்புக்கூறலின் ஊடாக நல்லிணக்கத்தை அடைய வேண்டும். மேலும் சிவில் சமூகத்தினருக்கான இடைவெளி வழங்கப்படுவது அவசி யம். அத்துடன் மரண தண்டனையை இலங்கை அமுல்படுத்தக்கூடாது” என்று கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி உரையாற்றுகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் 2015 ஆம் ஆண்டு முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 30/1 பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதன் பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கியது.
எனவே தற்போது இலங்கை பிரேரணை அனுசரணையிலிருந்து விலகியுள்ளதால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுைகயில் ஐரோப்பிய ஒன்றியம் கைவைக்கும் என பலரும் எதிர்வுகூறிக்கொண்டிருந்தனர். எனினும் பேரவையில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் எதுவும் குறிப்பிடாமை விசேட அம்சமாகும்.
அதன்பின்னர் விவாதத்தில் பிரிட் டனின் ஜெனிவாவிற்கான தூதுவர் உரையாற்றினார். பிரிட்டனின் இலங்கை தொடர்பான உரையானது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமைந்திருந்தது. காரணம் பிரிட்டன் இந்த விவாதத்தில் கனடா, மெசடோனியா உள்ளிட்ட நாடுகளின் சார்பாக உரையாற்றியது. இந்த நாடுகளே 2015ஆம் ஆண்டு 30/1 பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தன.
பிரிட்டனின் நிலைப்பாடு
எனவே பிரிட்டன் என்ன கூறப்போகின்றது என்பதை அனைவரும் வெகுவாக சபையில் எதிர் பார்த்தவண்ணமிருந்தனர். முக்கியமாக இலங்கைத் தரப்பினரும் மனித உரிமைப் பேரவைப் பிரதிநிதிகளும் பிரிட்டனின் உரைமீது கவனம் செலுத்தியிருந்தனர். பிரிட்டன் பிரதிநிதி இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றுகையில்,
“ 30/1 பிரேரணையானது சமாதானத் தையும் நல்லிணக்கத்தையும் வலி யுறுத்துகின்றது. 30/1 பிரேரணை வந்த பின்னர் மீண்டும் இரண்டு பிரேரணைகள் 34/1 மற்றும் 40/1 என்ற பெயர்களில் வந்தன. இதனூடாகவே காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பன அமைக்கப்பட்டன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளதாகத் தெரிகின்றது. அரசாங்கம் 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுகின்றமை தொடர்பில் நாம் அதிருப்தி அடைகின்றோம். இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் 30/1 பிரேரணை அமுல்படுத்தப்படவேண்டும். இது குறித்த இலங்கையின் நடவடிக்கைகள் தொடரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதன்படி இலங்கை அனுசரணை யிலிருந்து விலகுகின்றமை தொடர்பில் பிரிட்டன் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன் இலங்கை, நல் லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டு மென்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்ட,ன் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளும் இலங்கை அனுசரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கடும் அதிருப்தியையும் கவலையையும் சபையில் வெளியிட்டிருந்தன.
தொடர்ந்து ஒருசில நாடுகளின் உரைகளுடன் இலங்கை தொடர்பான விவாதம் நிறைவுக்கு வந்தது. இலங்கை தொடர்பான விவாதத்தின் மிக முக்கிய அம்சமாக இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். முதலாவதாக இலங்கையின் மாற்று யோசனையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிராகரித்தமை மிக முக்கியமானதொரு விடயமாகும். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை கூட எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே இலங்கையானது தற்போது தாம் நம்பகத்தன்மையுடன் பொறுப்புக்கூறலை முன்னெடுப்போம் என்ற கட்டாயத்தில் இருக்கின்றது. இரண்டாவது முக்கிய விடயமாக விவாதத்தில் வெளிப்பட்டது என்னவென்றால், காணாமல்போனோர் அலுவலகம் தொடர்ந்தும் நீடிக்கும் என்ற இலங்கையின் அறிவிப்பாகும். இது உண்மையில் ஒரு திருப்புமுனையாகவே இருக்கின்றது. காரணம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் காணாமல்போனோர் அலுவலகம் செயலிழக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காணாமல்போனோர் அலுவலகம் நீடிக்கும் என்று அரசாங் கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருக்கின்றமை மிக முக்கியத்துவமிக்க விடயமாக உள்ளது.
பல்வேறு தரப்புக்களின் பிரசன்னம்
இது இவ்வாறிருக்க, ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கையின் சார்பில் அரச தூதுக்குழுவினர் பங்கேற்றுள்ளதுடன் அவர்களும் கூட்டங்களில் உரையாற்றி வருகின்றனர். அதேபோன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் உயர் அதிகாரிகள் பலர் மனித உரிமைப் பேரவை வளாகத்தில் முகாமிட்டிருக்கின்றனர். அவ்வப்போது நடைபெற்று வருகின்ற உப குழுக்கூட்டங்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
மனித உரிமைப் பேரவை மற்றும் மனித உரிமை அலுவலகம் என்பன திட்டவட்டமாக தமது முடிவை அறிவித்திருக்கின்றன. இலங்கை அரசாங்கமும் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த கட்டமாக எவ்வாறு நீதி கிடைக்கும் என்பதையே நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை இலங்கை தொடர்பான பரபரப்பான விவாதம் நடந்தேறியிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM