ஜெனிவா தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக இலங்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அந்த சபையில் முன்னிலையாகி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். இதனையடுத்து, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் நிலை என்னவாகும் என்ற கேள்வி பரபரப்பாகப் பல மட்டங்களில் எழுந்துள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை ராஜபக் ஷாக்கள் ஏற்கனவே கொண்டிருந்தார்கள். அது வியப்புக்குரிய ஒரு விடயமாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏனெனில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்களுக்கும் உரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்த தினத்தில் இருந்தே அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ மறுப்பு தெரிவித்து வந்தார்.
இருப்பினும் யுத்தம் முடிந்த உடனேயே – ஒரு வார காலப்பகுதியிலேயே 2009 மே மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உரிமை மீறல் விடயங்களுக்கு பொறுப்பு கூறுவதற்கான கடப்பாட்டை மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் ஏற்றுக்கொண்டார்.
அந்த விஜயத்தின்போது, பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் தொண்டு நிறுவன அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடி நிலைமைகளைத் தெரிந்து கொண்டிருந்தார். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் முகாமில் யுத்த அகதிகளைப் பார்வையிட்டதுடன், இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களையும் உலங்கு வானூர்தியில் பறந்து பார்வையிட்டு நிலைமைகளைக் கணித்துக் கொண்டார்.
பான் கீ மூன் தனது இலங்கை விஜயத்தின்போது யுத்தம் முடிந்தவுடனான நாட்டின் நிலைமைகளைப் பல்வேறு தளங்களில் நன்கு அறிந்து கொண்டதன் பின்பே மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்திருந்தார். ஆயினும் சர்வதேச விசாரணையை மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும், யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதை பன்ா கீ மூன் வலியுறுத்தியபோது, அதனை மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக்கொண்டார்.
காலம் கடத்துவதிலேயே கருத்தூன்றி இருந்தது
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்புக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதன் மூலம் நிலையான அமைதி, சமாதானம், அபிவிருத்தி என்பவற்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.
பல்வேறு விடயங்கள் குறித்து பான் கீ மூன் வெளியிட்ட கருத்துக்களை மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக்கொண்டதையடுத்து, இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையும் வெளியாகி இருந்தது.
ஆனால், தொடர்ச்சியாகவே மஹிந்த ராஜபக் ஷ மனித உரிமை மீறல்கள் இடம் பெறவில்லை என்பதை வலியுறுத்தி வந்தார். இராணுவத்தினர் மனித உரிமைகளை மீறவில்லை. எனவே எந்தவொரு இராணுவ வீரரையும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்க மாட்டேன் என்று 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி அதிகாரத்தை இழக்கும் வரையில் அதிகாரபூர்வமாக அடித்துக் கூறியிருந்தார்.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் என வர்ணிக்கப்பட்ட முன்னைய அரசாங்கம் இறுதி யுத்தநேரத்து போர்க்குற்றச் செயல்கள், உரிமை மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்புக் கூறும் வகையில் ஐ.நா.வின் 30-/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது.
அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் 2 வருடங்கள் வீதம் இரண்டு தடவைகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாகிய நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்டது. இந்த வகையிலேயே முதலில் 30-/1, பின்னர் 34-/1 இறுதியாக 40/-1 என வரிசையாக ஆனால் மூன்று தீர்மானங்கள் இலங்கையின் அனுசரணையுடன் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அரசு வேண்டா விருப்புடனேயே செயற்பட்டு வந்தது. முதல் இரண்டு வருட கால அவகாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய விடயங்கள் எதனையும் நல்லாட்சி அரசாங்கத்தினர் நிறைவேற்றவில்லை. சாக்குபோக்குகளைக் கூறி காலம் கடத்துவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டிருந்தனர்.
இரண்டாவது தடவையாகவும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெறுவதிலேயே அவர்கள் குறியாக இருந்து செயற்பட்டிருந்தனர். அரசாங்கத்தின் இந்த நிலைமைகளை நன்கு அறிந்திருந்த போதிலும், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு மனித உரிமைப் பேரவையில் நெருக்குதல் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்த போதிலும், அதனைப் பயன்படுத்தவில்லை. மாறாகக் கால அவகாசம் வழங்குவதற்கே ஒத்தாசை புரிந்திருந்தது.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத நல்லிணக்கம்
இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. தீர்மானம் தொடர்பில் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்று பாதிக்கப்பட்ட மக்களும் பங்காளிக்கட்சிகளும் கூட எதிர்ப்பு. தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் கூட்டமைப்பின் தலைமை அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதைத் தவிர்த்து, அதன் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதைத் தடுத்துநிறுத்துவதிலேயே குறியாக இருந்து செயற்பட்டிருந்தது.
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் உறுப்பு நாடுகளோ அல்லது அதனை முன்னின்று கொண்டு வந்த அமெரிக்காவோ தனது பிராந்திய நலன்களின் அடிப்படையில் இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதற்கான முடிவை மேற்கொண்டிருந்தாலும்கூட, பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்களை பிரதிபலித்திருக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு பேச்சுக்குக்கூட அதனைச் செய்யவில்லை.
இதனால் மனித உரிமைகள் மீறப்படவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாகச் செயற்பட்டிருந்த அரசு தன்போக்கிலேயே செயற்பட்டிருந்தது. நியாயமாகச் செயற்பட்டிருக்க வேண்டிய விடயங்களில்கூட அது தனது பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை. ஆனால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்தின் மீது தான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததை
வெளிப்படுத்துவதிலும் அந்த நம்பிக்கை முழு அளவில் அரசுக்குக் கிடைப்பதிலுமே கவனமாக இருந்து செயற்பட்டிருந்தது.
சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதன் மூலம், தமிழ் மக்களின் எதிர்காலம் ஆபத்தான நிலைமையை நோக்கி நகர்த்திச் செல்லப்படுவதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை உணர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இதனால் நம்பிக்கெட்ட நிலைமைக்கு இன்று கூட்டமைப்பு ஆளாகியிருக்கின்றது. இதனால் தமிழ் மக்களும் அந்த நிலைமையை நோக்கி வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தகாலத்தில் மட்டுமல்லாமல் யுத்தத்தின் பின்னரும்கூட – 2015ஆம் ஆண்டு வரையில் எதிர்ப்பரசியலை நடத்தி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி இணங்கிச் செல்கின்ற அரசியல் யுத்தியைக் கையில் எடுத்திருந்தது. இதன் விளைவாகவே நிபந்தனையற்ற ஆதரவை மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு தமிழர் தரப்பில் இருந்து கிடைத்திருந்தது.
தமிழ் மக்களின் ஆதரவினாலேயே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கவும் முடிந்தது. ஆனால் அந்த நல்லிணக்கத்தை அரசியல் ரீதியான நல்லுறவை நம்பிக்கைக்குரிய உறவு நிலையைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரியதொரு கருவியாகவோ, உத்தியாகவோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்தவில்லை.
கடும்போக்கின் வெளிப்பாட்டின் அடையாளம்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு தன்னால் ஆபத்து நேரிட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் செயற்பட்டிருந்த போதிலும், அதனுடைய சக்தியையும் மீறிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராஜபக் ஷக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய காட்சி நடந்தேறியிருக்கின்றது.
உள்ளதும் கைவிட்டுப் போனதே என்று கவலைப்படத்தக்க வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தமிழ் மக்களுக்குப் பாதகமான காரியங்களை முன்னெடுத்து வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கிய நடவடிக்கையாக ஜெனிவா தீர்மானத்திற்கு அரசு வழங்கியிருந்த அனுசரணையை ஜனாதிபதி கோத்தபாய அரசு விலக்கிக் கொண்டிருக்கின்றது. இது ஜனாதிபதி கோத்தபாயவின் கடும் போக்கிலான அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.
ஜெனிவா தீர்மானத்திற்கான அனுசரணையை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ள இலங்கை அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றது என்பது இதனை எழுதும் வேளை வரையில் வெளிப்படுத்தவில்லை. ஆயினும் அந்த மாற்று ஏற்பாடுகள் ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றுக்கான பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் அதன் உறுப்பு நாடுகளும் எதிர்பார்க்கின்ற சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருக்குமா என்பது சந்தேகமே.
முதலில் வெளிவந்த அறிக்கைகளின்படி, தீர்மானத்தில் இருந்து அரசு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜெனிவா தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையில் இருந்தே அரசு விலகி இருக்கும். அதாவது ஜெனிவா தீர்மானத்திற்கான தனது இணை அனுசரணையை அது விலக்கிக் கொள்கின்றது என்றே கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இருந்து இலங்கை விலகிக் கொள்ளமாட்டாது. தொடர்ந்து அங்கம் வகிக்கும். அத்துடன் ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணை என்பது அந்தத் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வது என்ற கருத்தியல் சார்ந்தது. அதில் இருந்து விலகிக் கொள்வது அல்லது அதனை விலக்கிக் கொள்வதென்பது, அந்தத் தீர்மானத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஏற்க மறுப்பது என்ற வகையில் பொருள் கோடல் செய்து கொள்ள முடியும்.
எனவே, ஜெனிவா தீர்மானத்தின் அனுசரணையை விலக்கிக் கொள்வதன் ஊடாக அந்தத் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. அதனை முழுமையாக நிறைவேற்றப் போவதில்லை என்ற கருத்தியலில் அதன் முக்கிய அம்சங்களை ஜனாதிபதி கோத்தபாய அரசு புறந்தள்ளிச் செயற்படத் தயாராகி உள்ளது என்பது வெளிப்பட்டிருக்கின்றது.
முன்னைய அரசு தனது கடமையையே செய்துள்ளது
அத்தகைய ஒரு நிலையில் அரசு தனக்கு சாதகமான முறையிலேயே ஜெனிவா தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அத்தகைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பையும், நீதி கிடைக்க வேண்டும் என்ற அவர்களின் நியாயமான ஆவலையும் பூர்த்தி செய்யப் போவதில்லை.
ஜெனிவா தீர்மானத்தின் அனுசரணையை விலக்கிக் கொள்வதற்கு இலங்கையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் இராஜதந்திர மட்டத்திலான கருத்தமைவுகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
ஜெனிவா தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியிருப்பது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது. நாட்டின் இறைமைக்கு மாறானது. அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை போன்ற காரணங்களை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வரிசையாக அடுக்கியிருக்கின்றார்.
மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்று இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் குறித்து பாராளுமன்றத்தில் அனுமதி பெற்று அல்லது அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறந்தள்ள வேண்டும் என்பதல்ல.
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற விடயங்களும் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற வேண்டிய விடயங்களும் வேறு வகையானவை. வேறு வடிவத்திலானவை. மனித உரிமை மீறல் என்பது சாதாரண நிலைமையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை. மோசமான ஒரு யுத்தத்தின் முடிவிலேயே இது முன் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டதன் பின்னரே இந்தக் கூற்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றார்கள். அவயவங்களை இழந்து இயலாமை நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது தலைவர்களை இழந்து நிர்க்கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய ஒருவரை அல்லது பெற்றோர்கள் இருவரையுமே இழந்து யுத்த அனாதைகளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இத்தகைய பின்புலத்தில் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் தீர்மானம் ஒன்றின் ஊடாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உரிமை மீறல் விடயங்களை ஏற்பதை அல்லது மறுப்பதை மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி ஆராய்ந்து முடிவெடுத்துக் கொண்டிருக்க
முடியாது. அந்தக் குற்றச்சாட்டுக்களில் உள்ள நியாயத்தன்மையை நிரூபிப்பதற்கு அல்லது அவற்றால் ஏற்பட்டுள்ள பின்னடைவை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே பொறுப்புள்ள ஓர் அரசாங்கத்தின் கடமையாகும். அதைத்தான் மைத்திரி–ரணில் இரட்டையர் தலைமையிலான அரசாங்கம் செய்திருக்கின்றது.
முன்வருவார்களா?
இதனை நாட்டின் அரசியலமைப்பை மீறிய செயல் என்றும் நாட்டின் இறைமைக்கு முரணானது என்றும் காரண காரியம் கூறி அவற்றில் இருந்து தப்பிக் கொள்ள முயற்சிப்பது மோசமான விளைவுகளுக்கே வழி வகுக்கும்.
ஜெனிவா தீர்மானத்துக்கான அனுசரணை விலக்கிக் கொள்ளப்பட்டமை குறித்து உடனடியாகவே பிரிட்டன் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் கடும் அதிருப்தியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் நேரடியாக வெளியிட்டுள்ளார். அத்துடன் நாட்டில் நல்லிணக்கத்திலும் பொறுப்புக் கூறுதலிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுகின்ற கடப்பாட்டைத் தட்டிக்கழிப்பதையோ அல்லது அதில் இருந்து தப்பிச் செல்வ தையோ எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று நம்பலாம். எதிர்பார்க்கலாம்.
ஆனால் பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி நீதிக்காக ஏங்குகின்ற மக்களைக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தரப்பு அத்தகைய எதிர்பார்ப்புடன் வாளாவிருந்துவிட முடியாது. ெஜனிவா தீர்மானத்தின் உள்ளடக்கத்திற்கு அமைவாக நிலைமாறுகால நீதியை நிலைநாட்டி, நடந்து முடிந்த சம்பவங்களின் உண்மை நிலையைக் கண்டறிவதற்கும், நியாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், இழப்பீட்டு உரிமையை நிலைநிறுத்தி, இத்தகைய பாரதூரமான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் உரிய தூண்டுதல் களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இணை அனுசரணையை விலக்கிக் கொண்டிருப்பதன் ஊடாக சர்வதேசத்தின் அதிருப்தியை அரசு சம்பாதித்துள்ள நிலையில் தமிழ்த் தரப்பின் ஏமாற்ற உணர் வுகளையும். தமது எதிர்காலம் குறித்த அவர்களுடைய அச்சத்தையும் அதற்கான மாற்று வழிகளாக அவர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்த வேண்டும்.
அதன் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்க ளின் விடயங்களை எடுத்தெறிந்த போக்கில் கையாண்டு வருகின்ற அரசாங்கத்தின் மீதான அழுத்தத்திற்கு வாய்ப்பாக சர்வதேச அளவில் எழுந்துள்ள இப்போதைய நிலை மையைத் தமக்கு சாதகமான நிலைமையை நோக்கி நகரச்செய்வதற்கான முயற்சிகளில் தமிழ்த்தரப்பு ஈடுபட வேண்டியது அவசி யம்.
புலத்தில் உள்ள தமிழ்த்தரப்பினரும் களத் தில் உள்ள தமிழ்த்தரப்பினரும் ஒன்றி ணைந்து இந்தக் கைங்கரியத்தை முன்னெ டுக்க வேண்டும்.
செய்வார்களா? அந்த வகையில் செயற்பட உடனடியாக முன்வருவார்களா?
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM