நடிகர் சூர்யாவுடன் இயக்குனர் ஹரி இணையும் புதிய படத்திற்கு ‘அருவா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘சிங்கம்’,‘ மாசு என்கிற மாசிலாமணி ’,‘சிங்கம் 3’,‘ தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம், மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படத்தை, இயக்குனர் ஹரி இயக்கத்தில் தயாரிக்கிறது. இயக்குநர் ஹரி, ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் வெளியான ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவ்விருவரும் இணையும் ஆறாவது படத்திற்கு, ‘அருவா ’என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். ஹரி, சூர்யா கூட்டணியில் முதன்முறையாக டி இமான் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி, ஒரே கட்டமாக நடைபெற இருப்பதாகவும், தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

‘அருவா ’சிங்கம் படத்தின் நான்காம் பாகம் அல்ல என்றும், கிராமீய பின்னணியிலான புதிய திரைக்கதை என்றும் இயக்குநர் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

இதனிடையே இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ அடுத்த மாதம் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.