( மயூரன் )

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடல் பிரதேசத்தில் அத்துமீறி உள் நுழைந்து சட்டவிரோதமான முறையில்  கடலட்டை பிடித்த வெளிமாவட்டங்களை சேர்ந்த 165 மீனவர்களை கட்டைக்காடு மீனவர்கள் கடலினுள் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , 

கட்டைக்காடு கடல் பகுதியில் வியாழக்கிழமை மாலை வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள் 55 படகுளில் அத்து மீறி உள் நுழைந்து அங்கு சட்டவிரோதமான முறையில்  கடலட்டை பிடிக்கும் தொழில் ஈடுபட்டு இருந்தனர். 

அதனை அவதானித்த கட்டைக்காட்டைச் சேர்ந்த சில மீனவர்கள் தமது படகுகளில் சென்று கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் இங்கு கடலட்டை பிடிக்க வேண்டாம் திரும்பி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் தரப்பினர் கட்டைக்காடு மீனவர் ஒருவருக்கு இரும்புக் கம்பியினால் தாக்கியுள்ளனர். 

அத்தாக்குதலில் படுகாயமடைந்த மீனவரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்து  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் கட்டைக்காடு மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது படகுகளில் கடலுக்குள் சென்று அங்கு கடலட்டை பிடித்துக் கொண்டு இருந்த வெளிமாவட்ட மீனவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து அவர்களின் படகுகளுடன் கட்டைக்காடு கடற்கரைக்கு கொண்டுவந்தனர்.

இதனால் கட்டைக்காடு கடற்கரையில் பதற்றம் ஏற்பட்டது. அதனை கேள்வியுற்ற , பிரதேச செயலர் , பொலிசார் , கடற்படையினர் , மற்றும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கட்டைக்காடு மீனவர்களுடன் சமர பேச்சுக்களில் ஈடுபட்டனர். 

அதனை தொடர்ந்து கட்டைக்காடு மீனவர்களால் வெளிமாட்டங்களை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களில் பெரும்பாலனவர்கள் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.