அமெரிக்கா மற்றும் தலீபானியர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளபடி, தலீபான் கைதிகளை விடுவிப்பதாக தனது அரசாங்கம் உறுதியளிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

கட்டாரில் நேற்று சனிக்கிழமை அமெரிக்க மற்றும் தலீபான் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு கைச்சாத்திடப்பட்ட முக்கிய ஒப்பந்ததின் கீழ், மார்ச் 10 ஆம் திகதிக்குள் 1,000 அரசாங்க கைதிகளுக்கு ஈடாக 5,000 தலீபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, கைதிகள் விடுதலை பேச்சுவார்த்தைகளிற்கான முக்கிய தேவையாகயிருக்க முடியாது ஆனால் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக விளங்கலாம் என்றார்.

அமெரிக்க-தலிபானுக்கிடையேயான இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும்.

அதற்கு ஈடாக, ஆப்கானிய அரசாங்கத்துடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் ஒப்புக்கொண்டது.

அல்-கொய்தா மற்றும் பிற அனைத்து தீவிரவாத குழுக்களும் தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் செயல்படுவதைத் தடுக்க இந்த ஒப்பந்தம் தலீபான்களுக்கு வலிவகுத்துள்ளது.

Photo Credit : twitter