நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணயய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ஓட்டங்களுக்கு சுருண்டது.  

நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். வோக்னர் ஒரு விக்கெடை வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்தின் ஆரம்ப வீரர் டொம் லெதம் அரை சதமடித்து 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்திய கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். எனினும் அவர் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 7 ஓட்டங்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயங் அகர்வால் இறங்கினர். பிரித்வி ஷா 24 பந்துகளில் 14 ஓட்டங்களையும்,  மயங் அகர்வால் 6 பந்துகளில் 3 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொப்ப ஓட்டங்களில் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். 

இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ஓவரில் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா 24 ஓட்டங்களை எடுத்தார். 

தற்போது இந்திய அணி 97 ஓட்டங்களினால் முன்னிலை வகிக்கிறது.  நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Photo Credit : ‍ICC