சீனாவில் உருவாகி உலகம் முழுதும் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் காரணமாக சீனாவுக்க வெளியே அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ள தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இரு பயணிகள் காய்ச்சல் காரணமாக விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை தென் கொரியாவின் இன்சீயோனில் இருந்து KE-473 என்ற கொரிய விமானத்தில்  137 இலங்கை பிரஜைகள் உட்பட 182 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இருவருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இரண்டு பயணிகளும் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் தென் கொரியாவில் கொவிட்-19 வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் வெகுவாக  அதிகரித்துள்ளதாக  கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நாடுகளிலிருந்து காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும்  அனைத்து பயணிகளும் விமான நிலைய சுகாதார வைத்திய பிரிவினால்  நிறுவப்பட்டுள்ள தானியங்கி உபகரணங்களால் வழக்கமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.