2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் நேற்றைய தினம் கையெழுத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தான், கட்டார், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தாலிருந்து  அமெரிக்கா தனது படைகளை படிப்படியாக திரும்பப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கூட்டு அறிக்கை ஒன்றை அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் வெளியிட்டன.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், 135 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும்.

* 14 மாதங்களில் நேட்டோ படை வீரர்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள்.

* ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இது வரும் 10 ஆம் திகதி நோர்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் தொடங்கும்.

* இரு தரப்பு கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள். (5 ஆயிரம் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் காவலில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் படையினர் 1000 பேர் தலீபான்கள் காவலில் இருக்கின்றனர்.) என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Photo Credit : Aljazeera