கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை (GIZ) அமைப்பினால் செயற்படுத்தப்பட்டிருந்த இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஜேர்மனியின் பொருளாதார கூட்டாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சின் சார்பாக Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH மற்றும் Kreditanstalt für Wiederaufbau (German Development Bank- KfW) ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் செயற்படுத்தப்படும் தொழிற்பயிற்சி செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. 

இந்த செயற்திட்டத்துக்கு இணை நிதி உதவி சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் குடிபெயர்வு செயலாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டிருந்தது. 

2012 இல் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கேள்வி அடிப்படையிலான தொழிற் பயிற்சிகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாக அமைந்திருந்தது.

இந்த இலங்கை – ஜேர்மனி பயிற்சி நிறுவனம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும். இலங்கையின் சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் சமமான முறையில் சேவைகளை வழங்கும் தேசிய மட்ட பயிற்சி நிலையமாக செயற்படும் பொதுவான நோக்கத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளதுடன், இலங்கையின் பரந்த கலாசார பாரம்பரியங்கள் குறித்த விளக்கங்களையும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

வாகன தொழில்நுட்பம், நிர்மாண தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பம், எந்திரவியல் பொறியியல் மற்றும் மின்சார மற்றும் மின் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உயர் தரம் வாய்ந்த தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும். ஆங்கில மொழியில் சகல பயிற்சி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், 

“இந்த துறைகளில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாக இனங்காணப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு உயர்ந்த பயிற்சிகளைப் பெற்று ஆளுமை படைத்த ஊழியர்களாக திகழக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக பெறுமதி வாய்ந்த துறைசார் அறிவை பெற்றுக் கொள்ளவும் சந்தை அடிப்படையிலான அறிவை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். போட்டிகரமான தொழில் சந்தையில் அவர்களுக்கு தொழில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இது பெருமளவில் அதிகரிக்கும்.” என்றார்.

வருடாந்தம் 200 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ)கட்டமைப்புக்கமைய NVQ Level 4 முதல் 6 வரையான பயிற்சிகள் வழங்கப்படும்.

மாணவர்களை இதற்கு தயார்ப்படுத்துவதற்கு, தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) 1 முதல் 3 வரை பயிற்சிகள் வழங்க 14 தொழிற்பயிற்சி நிலையங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செய்மதி நிலையங்களாக இனங்காணப்பட்டுள்ளன. இந்த செய்மதி நிலையங்கள் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தரத்துக்கேற்ப மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளன.

க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த. உயர் தரம், மற்றும் NVQ Level 3 மற்றும் 4 தகைமைகளைக் கொண்டவர்களுக்கு இலங்கை – ஜேர்மனி பயிற்சி நிறுவனம் கற்கைகளை வழங்கும். இந்நிறுவனத்தின் பயிற்சி ஊழியர்களை ஜேர்மனியின் ஆலோசகர்கள் Training of Trainers (ToT) முறை மூலமாக மேற்பார்வை செய்வார்கள்.

 2016 ஜுன் மாதம் முதற்கட்டமாக 22 பயிற்சியாளர்கள் Training of Trainers (ToT) முறை மூலமாக பயிற்சிகளை பூர்த்தி செய்துள்ளனர். ஆரம்ப செயற்பாடுகளில் அனுபவம் வாய்ந்த ஜேர்மனிய அதிபரினால் சர்வதேச சிறந்த செயற்பாடுகளை மேற்பார்வை மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன வசதிகள் படைத்த இலங்கை – ஜேர்மனி பயிற்சி நிறுவனம் கிளிநொச்சி நகரில் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப்பணிகள் சாதனங்கள் வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக KfW (German Development Bank) இனால் 8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

GIZ ஊடாக தொழில்நுட்ப உதவிகளுக்கான மேலதிக 8 மில்லியன்  யூரோக்களை ஜேர்மனி பொருளாதார கூட்டாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சு வழங்கியிருந்தது. தொழில்நுட்ப உதவிகள், நிர்வாக ஊழியர்களின் மற்றும் பயிற்சியாளர்களின் திறன் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் பொறுப்பை GIZ ஏற்றிருந்தது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மனி உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவை மேம்படுத்துவதற்கான சிறந்த ஆரம்பப்படியாக இந்த இலங்கை – ஜேர்மனி பயிற்சி நிறுவனம் அமைந்திருக்கும். நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டுக்கு தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன ஜேர்மனியால் காண்பிக்கப்படுகிறது.” என்றார்.

இலங்கையில் GIZ இன் பணிப்பாளர் ரண்டா குரியே ரணாரிவிலோ கருத்து தெரிவிக்கையில், 

“இலங்கையில் தொழிற்பயிற்சிகளை மேம்படுத்துவது தொடர்பில் GIZ தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கத்துடன் நாம் சிறந்த உறவுகளை ஏற்படுத்தியுள்ளோம், இதற்கு சிறந்த உதாரணமாக இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளமை அமைந்துள்ளது.” என்றார்.

50 வருடங்களுக்கு மேலாக, GIZ இனால் நிலைபேறான அபிவிருத்திக்கான சர்வதேச ஒன்றிணைவு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்கள் போன்றவற்றில் கொண்டுள்ள அனுபவங்களை பயன்படுத்தல், சூழல் மற்றும் வலு மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றின் மூலமாக சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. GIZ சேவைகள் ஜேர்மன் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய நாடுகளின் அரசாங்கங்களினாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில் சர்வதேச அமைப்புகளான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்றனவும் அடங்கியுள்ளன. 

2014 இல் GIZ இன் வியாபார கொள்ளளவு இரு பில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. 130 க்கும் அதிகமான நாடுகளில் GIZ அங்கத்தவர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1956 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் GIZ இயங்கி வருகிறது. கல்வி, சமூக ஒன்றிணைவு, தனியார் துறை அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக திறன் விருத்தி செயற்பாடுகளில் கூட்டாண்மை நடவடிக்கைகளை இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகியன பேணி வருகின்றன. 

இதனூடாக சிலோன் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையம், தொழில்பயிலுநர் பயிற்சி நிலையம், இலங்கை ஜேர்மன் புகையிரத பயிற்சி நிலையம் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி நிலையம் போன்றன ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. 

இலங்கையின் தொழிற்பயிற்சி துறையில் முக்கிய பங்களிப்பை ஜேர்மனி மேற்கொண்டு வருகிறது. தற்போது நாட்டின் தொழிற்பயிற்சிகளுக்கான தொழில்நுட்ப பங்காளராகவும் முக்கியமான  நிதி உதவியாளராகவும் ஜேர்மனி திகழ்கிறது.