வடக்கில் பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் , சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 103 ஆவது வருட கிரிக்கெட் போட்டி கடந்த 28,29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

 நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை  இடைநிறுத்திக்கொண்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  

05 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி விக்கெட் இழப்பின்றி வெற்றியை பெற்றுக்கொண்டது.

இப் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்களான ஏ.கௌசிகன் 22 ஓட்டங்களையும் எம். சிந்துஜன் 15,ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக ஈ.டிலக்ஷன் 60 ஓட்டங்களையும் எஸ்.பி. கஸ்ரோ ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் எஸ்..கீர்த்தன் 42 ஓட்டங்களையும் ஏ.பி.டெஸ்வின் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் எஸ்.பிரியங்கன் 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 05 விக்கெட்டுக்களையும் சென் பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக சுழல் பந்து வீச்சாளர் டி. டனிஷியஸ் முதல் இன்னிங்ஸில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களையும் , இரண்டாவது இன்னிங்ஸில் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.