(ஆர்.விதுஷா)

நாட்டில் இராணுவ ஆட்சியினை  ஏற்படுத்தும்  நோக்கிலேயே  அரசாங்கம் செயற்படுகின்றது  எனத் தெரிவித்த ஐக்கிய  தேசிய  கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்  நளின் பண்டார, சேவை  தொடர்பில்  பாதுகாப்பு தரப்பினருக்கிடையில்  முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் போக்குவரத்து சேவையில்  பொலிசாருடன்  இராணுவ  பொலிசாரும்  இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன?  பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான  நிலையில்  இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட  சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள்   தோன்றும் வாய்ப்புக்கள்  ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும்  நிலைப்பாட்டியேலே  அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே  இச் செயற்பாட்டினைக் கருத முடியும்.  

அத்துடன் எயார் பஸ்  கொள்வனவின்  போது இடம் பெற்றதாக  கூறப்படும்  நிதி  மோசடி தொடர்பில்  நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது. இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலான  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பிலான விசாரணைகள்  உரிய  முறையில்  முன்னெடுக்கப்பட வேண்டும் . அத்துடன்,  மஹிந்த தரப்பினர் 2015  இற்கு  முன்னராக  நாட்டு மக்களை  ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்பொழுதும் இடம்பெற்று  வருகின்றவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.