(எம்.ஆர்.எம்.வஸீம்)

எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கத்தின் தீர்மானம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்வரை கைச்சாத்திடுவதில்லை என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி அல்லது பிரதமர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் இன, மதங்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்புவதறகாக பாராளுமன்ற துறைசார் பேற்பார்வை குழு சில பரிந்துரைகளை செய்திருக்கின்றது. அதில் பள்ளிவாசல்கள் குர்ஆன் மத்ரசாங்களுக்கு சட்ட திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்திருக்கின்றது. 

ஆனால் கடந்த சில வருடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இன்னும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன. மஹர சிறைச்சாலை வளாகத்தில் பல வருடங்களாக செயற்பட்டுவந்த பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் முஸ்லிம் பள்ளிவாசல் மதில்களில் புத்தர் சிலை வைக்க மேற்கொண்ட முயற்சிகளால் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில் பொருத்தமில்லாத இடங்களில் புத்தர் சிலைகளை வைப்பது இன,மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதற்கு தேவையான பரிந்துரைகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. அதனால் இன,மத நட்புறவை கட்டியெழுப்புவதென்றால் சகல மதங்களுக்கும் ஒரேமாதிரியான சட்ட முறைமைகளை ஏற்படுத்தவேண்டும். அதில் பக்கச்சார்ப்பு இருக்க முடியாது என்றும் கூறினார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.