இந்தியாவில் மதுரை உலக தமிழ்சங்கத்தில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்த்தில், பன்முக நோக்கிலான அயலக படைப்புகள் பிரிவில்  சிறந்த படைப்பிற்கான பரிசை இலங்கை தமிழ் எழுத்தாளர்களான மாத்தளை சோமு மற்றும் ஆசி கந்தராஜா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார். 

இதுதொடர்பாக மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது,

“ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமெனில் புதிய புதிய சொற்கள் கண்டறிய படுவது அவசியம். அதற்கான பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை செய்துவருகிறது. உலகளவில் தமிழில் உள்ள 147 அகராதிகளை ஆய்வு செய்ததில், தமிழில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொற்கள் தனித்துவம் கொண்டவையாக இருக்கின்றன. மேலும் சொற்குவை திட்டத்தின் மூலம் இதுவரை 1000 புதிய சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

உலகின் பாரம்பரியமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக அளவில் இருக்கும் தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உலக தமிழ் சங்கங்களின் மாநாடு மார்ச் மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் 25 நாடுகளிலிருந்து ஏராளமான தமிழ் சங்கங்கள் பங்கேற்கின்றன.” என்றார்.

முன்னதாக மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் பன்முக நோக்கில் அயலகத் தமிழ் படைப்புகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரை சேர்ந்த கவிஞர் அ.இன்பா எழுதிய ‘மழை வாசம்’ என்ற கவிதை நூலும், அவுஸ்திரேலிய எழுத்தாளர் ஆசி கந்தராஜா எழுதிய ‘கள்ள கணக்கு’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும், அவுஸ்திரேலிய எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் எழுதிய ‘கண்டிச் சீமை ’என்ற வரலாற்று புதின நாவலும், ஜேர்மானிய தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரான க. சுபாஷினி அவர்கள் எழுதிய ‘ஜேர்மன் தமிழியல்’ என்ற ஆய்வு நூலும் சிறந்த படைப்பிற்கான பரிசு வழங்கப்பட்டது.