(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பு , நாட்டு பிரஜைகளின் அபிலாஷைகள் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில்  (எம்.சி.சி. ) கையெழுத்திடாமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எம்.சி.சி. தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

எம்.சி.சி. ஒப்பந்தத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டையும் தேசிய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு நாட்டு பிரஜைகளின் அபிலாஷைகளுக்கேற்ப இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு இந்த ஒப்பந்தம் சவாலாக அமையும் என்று இவ்வொப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.சி;.தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினார் தயாரிக்கப்பட்டு தன்னிடம் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அந்த இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பல விடயங்கள்  தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒழுங்குகள் இன்றி பொது மக்களுக்கு தெரியும் வகையில் கையெழுத்திடாதிருத்தல், அரசியலமைப்பு மற்றும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட விதிகளுக்கு ஏற்ப அல்லாமல் அவற்றை மீறிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தோடு தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான விடயங்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த ஒப்பந்தத்தில் பாதகமான உள்ளடக்கங்களை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.

ஏதோவொரு சிறந்த முறையில் எமது நாட்டுக்கு வெளிநாட்டு வருமானம் கிடைக்கப்பெறுமானால் அவை தொடர்பில் அவதானம் செலுத்தலாம். நூற்றுக்கு நூறு வீதம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வகையிலும், வட்டியற்ற கடன் சலுகை என்பறை கிடைக்கப்பெற்றால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியும். தேசிய பாதுகாப்புக்கு சவாலாக அமையாத வகையிலும் மக்களின் அபிலாஷைகளை மீறாத வகையிலும் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா இணக்கம் தெரிவிக்குமானால், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பாராளுமன்றம் அனுமதி வழங்கினால் மாத்திரமே கையெழுத்திட முடியும்.

இதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்தால் இடைக்கால அறிக்கை தயாரித்த குழுவிடமே மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.