(செ.தேன்மொழி)

களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களை அனுமதியின்றி அகற்றியமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான கொபய்துடுவே சபித்த தேரர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களை பல்கலைக்கழக மாவர்கள் சிலர் அனுமதியின்றி அகற்றியுள்ளதாக இன்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிரிபத்கொட பொலிஸார் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்டவர்களின் நான்கு மாணவர்கள் மாத்திரமே சம்பவத்தில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து களனி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான கொபய்துடுவே சபித்த தேரர் உட்பட நால்வரையும் தடுத்து வைத்துள்ள பொலிஸார் , ஏனைய 12 பேரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் , கிரிபத்கொட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.