எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான  கூட்டணியில் இணைந்துக் கொள்வதற்கான தேவை சுதந்திர கட்சியினருக்கும், பொதுஜன பெரமுனவினருக்கும் கிடையாது. கூட்டணியை பலப்படுத்த முன்னர் முதலில் சொந்த கட்சியை பிரதி  தலைவர் என்ற பதவியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் பலப்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின்  நிலைப்பாடு குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிற கட்சியின் உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்துக் கொள்ளுமர்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுப்பது  நகைப்புக்குரியன.

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் இணைந்துக் கொள்வதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.  

 ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சினை பிரதான பங்குதாரராகக் கொண்டு பொதுஜன பெரமுன பரந்துப்பட்ட கூட்டணியை  உருவாக்கியுள்ளது. இந்த  கூட்டணியில் பிரதான கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையின் ஊடாக கூட்டணியமைத்துக்கொள்வதில் எவ்வித இழுத்தடிப்புக்களையும் நாம் முன்னெடுக்கவில்லை.

 நாகரிகமான அரசியல் கலாச்சாரத்தை  ஐக்கிய தேசிய கட்சியினரால் முன்னெடுத்து செல்ல முடியாது.கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில்  எதிர்தரப்பினர் ஐக்கிய தேசிய  கட்சியின் அடிப்படை கொள்கையினை பின்பற்றவில்லை.

ஆகவே  அரசியல் ரீதியில் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.