தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிமைக்காக போராடி வருகின்ற நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியை செய்து வருகின்றது இவ்வாறு நாங்கள் மேற்கொண்டு வருகின்றபோது அதனைக் குழப்பும் வகையில் இங்குள்ளவர்களே அதில் ஈடுபடுவது மக்களுக்குக் கிடைக்கின்ற அபிவிருத்தியை தடுப்பதாகவே இருக்கின்றது. 

இதனை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என யாழ்.மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ். குருநகர் தொடர்மாடி விளையாட்டு மைதானம் மற்றும் கலை அரங்க திறப்பு விழா அண்மையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

என்றும் இல்லாத வகையில் கடந்த ஆட்சியில் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஊடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் செய்து வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை எங்களில் உள்ளவர்களே குழப்புகின்ற விதத்தில் செயற்படுகின்றார்கள்.

 அதற்கு எங்களில் உள்ள சிலரும் இணைந்து செயற்படுவதனால் மக்களுக்குக் கிடைக்கின்ற அபிவிருத்தித் திட்டத்தை குழப்புகின்ற வகையில் தான் அது அமைகின்றது. வேறு சில இடங்களில் இத்தகைய திட்டங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தான் இடம்பெறுகின்றது. ஆனால் இப் பிரதேசத்தில் அதைக்குழப்புவதற்கே செயற்படுகின்றார்கள். குழப்புகின்றவர்கள் தாம் செய்யாது மற்றவர்களையும் செய்யவிடாது தடுப்பதற்கே முயலுகின்றார்கள். 

இவர்கள் நாம் செய்கின்ற திட்டத்தைவிட அதற்குமேலும் பல விடையங்களை செய்வார்கள் என்றால் பாராட்டத்தக்கது. ஆனால் அதை விடுத்து அபிவிருத்தியை குழப்புகின்ற நோக்கத்தில் தான் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களுக்கு எது தேவையே அதை அறிந்து எமக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தத் திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிமைக்காக போராடி வருகின்ற நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியை செய்து வருகின்றது அதன் வெளிப்பாடுதான் இன்றைய திறப்புநிகழ்வின் ஒரு பகுதியாகும். இவ்வாறாக யாழ்.மாவட்டத்தில் பல இடங்களிலும் பலவேலைத்திட்டங்கள் இடம்பெற்றது. இனிவரும் காலத்திலும் கூட்டமைப்பினை தொடர்ந்தும் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் மக்களாகிய உங்களிடம் உள்ளது என்றார்.