Published by T. Saranya on 2020-02-27 15:31:17
ஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்ளையும் வெளியேற்றியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த இலங்கை உட்பட ஏனைய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏயர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இடம்பெறும் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் இருவரும் 14 நாட்களின் பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர்.
இந்நிலையில் இது குறித்து நன்றி தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர், டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்களும் டோக்கியோவிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக அறிவித்தார்.
இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் மூலம் அவர்களை அழைத்து வந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்“ என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.