ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கின்ற நிலையில்  காணா­மல்­போ­னோரின் உற­வு­களின் பிர­தி­நி­திகள் ஜெனி­வா­வுக்கு விஜயம் செய்து அங்கு நடை­பெறும்  இலங்கை தொடர்­பான உப­கு­ழுக்­கூட்­டங்­களில் பங்­கேற்று  தமது கவ­லைகள், வேத­னைகள் தொடர்­பாக  உரை­யாற்­று­வ­தற்கு  தயா­ரா­கி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின்  ஒவ்­வொரு கூட்டத் தொட­ருக்கும்   இவ்­வாறு  காணா­மல்­போனோர்  தொடர்­பான பிரச்­சினை மிகப்­பெ­ரிய அளவில்  பேசப்­ப­டு­வ­துடன் அது­தொ­டர்­பான அழுத்­தங்­களும்   பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­துடன் பல்­வேறு தரப்­பி­னரும்    இது தொடர்பில்   மிகத் தீவி­ர­மாக வலி­யு­றுத்தி வரு­வதும்   வழக்­க­மான நடை­மு­றை­யாக உள்­ளது.

இந்த நிலை­யி­லேயே இம்­மு­றையும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளா­கத்தில்  இந்த விடயம் தொடர்­பாக பல  உப­கு­ழு­ கூட்­டங்கள் நடை­பெ­று­வ­தற்கு  ஏற்­பா­டா­கி­யுள்­ள­துடன் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­களும்  ஐக்­கி­ய­ நா­டுகள் சபை­யி­னரும்  சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­களின் தலை­வர்­களும்   இலங்­கை­யி­லி­ருந்து சென்­றி­ருக்­கின்ற  பாதிக்­கப்­பட்ட மக்­களும்   இந்த உப­கு­ழுக் ­கூட்­டங்­களில் பங்­கேற்று  காணா­மல்­போனோர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்­த­வுள்­ள­தா­கவும்   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

யுத்தம் முடி­வ­டைந்து பத்­து ­வ­ரு­டங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இது­வரை   காணா­மல்­போன எந்­த­வொ­ரு­வ­ருக்கும் என்­ன­ ந­டந்­தது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை  கண்­டு­பிடித்து  தரு­மாறும்   அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறும் கோரி  பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர் போராட்­டங்­க­ளிலும் சுழற்­சி­ போ­ராட்­டங்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.  எனினும் அவர்­க­ளுக்கு இது­வரை   எவ்­வி­த­மான  தீர்வும் வழங்­கப்­ப­டாமல் இருக்­கின்­றது.  10 வரு­டங்­க­ளாக இந்த மக்கள் வேத­னை­யு­டனும்  தமது  காணா­மல்­போன அன்­புக்­கு­ரி­ய­வர்கள் குறித்த   எதிர்­பார்ப்­பு­டனும்  வாழ்ந்து வரு­கின்­றனர்.  

இந்த நிலை­யி­லேயே ஒவ்­வொரு வரு­டமும் ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நடை­பெ­று­கின்ற  கூட்டத் தொடர்­களில் பங்­கேற்று  தமது  கவ­லையை   எதிர்­பார்ப்பை  வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு  இலங்­கையின் மூன்று தசாப்­த­கால யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர்  யுத்­த­கா­லத்­தின்­போது காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரிக்­கு­மாறு கோரிக்­கைகள் வலு­வ­டைந்­தன.  உள்­ளக ரீதியில்  ஒரு விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து  தரு­மாறு  கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன. இது­தொ­டர்பில் சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய ­நா­டுகள் சபையும்  அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து  வந்­தன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளவில் இலங்கை  ஐக்­கி­ய ­நா­டுகள்  மனித உரிமைகள் பேர­வையில் ஒரு  பிரே­ர­ணையை கொண்­டு­வந்­தது. அந்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டது. அதிலும் கூட  யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­படும் எனக்­ கூ­றப்­பட்­டது.

எனினும்  தொடர்ந்தும் காணா­மல்­போனோர் தொடர்பில்  எந்­த­வி­த­மான முடிவும் கிடைக்­காத சூழலில் 2010ஆம் ஆண்டு கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு  நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் விசா­ரணை அமர்­வு­களை நடத்­தி­ய­போது   அங்கு   சாட்­சி­ய­மளித்த  பாதிக்­கப்­பட்ட  மக்கள்  காணா­மல்­போன  தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியே கதறி அழு­தனர்.  இந்த நிலையில்  2012, 2013ஆம் ஆண்­டு­களில் ஐ.நா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக பிரே­ர­ணைகள்   கொண்­டு­வ­ரப்­பட்­டன. அந்­தப்­ பி­ரே­ர­ணை­க­ளிலும் காணாமல்­போனோர் தொடர்­பாக விரை­வாக ஏற்­றுக்­கொள்­ளக்­கூடிய ஒரு தீர்வும்  உண்­மையைக் கண்­ட­றி­தலும்  அவ­சியம் என்ற விடயம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதன் ­பின்­னரே 2013ஆம் ஆண்டு   ஓய்­வு­பெற்ற  மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம  தலை­மையில்   காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும்    ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு  விசா­ரணை அமர்­வு­களை நடத்தி   பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து முறைப்­பா­டு­களை பெற்­றுக்­கொண்­டது. சுமார் 20000க்கும்  மேற்­பட்ட  எழுத்து­மூல முறைப்­பா­டுகள்   காணா­மல்­போனோர் தொடர்பில் அந்த ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்­கப் ­பெற்­றன. எனினும்  இறு­தியில்   குறித்த  ஆணைக்­கு­ழு­வி­னாலும்   காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு  மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்றம்  ஏற்­பட்­ட­தை­ய­டுத்து ஜெனிவா மனித உரி­மைகள் பே­ர­வையில் 30/1 என்ற   பிரேரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.  அந்த பிரே­ரணை பேர­வையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த பரிந்­து­ரை­களில்  காணா­மல்­போனோர் குறித்து  ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம்  ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென     தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி  பல்­வேறு  சர்ச்­சை­க­ளுக்கும் சவால்­க­ளுக்கும் மத்­தியில்  2017ஆம் ஆண்டு  காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிறு­வப்­பட்டது. எனினும்  இந்த காணா­மல்­போனோர் அலு­வ­லகம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில்  மிகப்­பெ­ரிய ஒரு நம்­பிக்கை ஏற்­ப­ட­வில்லை. அவர்கள்  அது­தொ­டர்பில்  ஒரு விமர்­சன ரீதி­யான நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளனர். தற்­போது இரண்டு வரு­டங்­க­ளாக   இந்த காணா­மல்­போனோர்  அலு­வ­லகம் இயங்கி வரு­கின்­ற­போ­திலும்   பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில்  அலு­வ­லகம்  தொடர்பில் பாரிய நம்­பிக்கை எதுவும் ஏற்­ப­ட­வில்லை.  இவ்­வாறு  தொடர்ச்­சி­யாக  பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய   வேத­னை­க­ளு­டனும் சொல்­லொ­ணா­த்துன்­பங்­க­ளு­டனும்  இருக்­கின்­றனர்.  2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் அவ்­வப்­போது  காணா­மல்­போனோரின் உற­வுகள்   ஆர்ப்­பாட்­டங்­களை  நடத்தி வந்­தனர்.   அத்­துடன்  தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களும்  நடை­பெற்று  வரு­கின்­றன.  எனினும்   இது­வரை  எந்­த­வொரு சம்­பவம் தொடர்­பா­கவும்  சரி­யா­ன­தொரு   முடிவு கிடைக்­கா­த நிலைமையே காணப்­ப­டு­கின்­றது.

ஐக்­கி­ய ­நா­டுகள் சபை தொடர்ச்­சி­யாக இந்த காணா­மல்­போனோர் தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்­க­வேண்­டு­மென  வலி­யு­றுத்தி வரு­கின்றது. ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையும் இது தொடர்பில் மிகவும் அவ­தா­னத்­துடன்  செயற்­பட்டு வரு­கின்­றது.  சர்வ­தேச மனித உரிமை அமைப்­பு­க­ளான  மன்­னிப்­பு­சபை  மற்றும் மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் என்­ப­னவும்   காணா­மல்­போனோர் தொடர்பில் உண்­மையைக் கண்­டு­பி­டிக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இவ்­வா­றான பின்­ன­ணியில் அண்­மையில் இலங்­கை­யி­லுள்ள   ஐக்­கி­ய­ நா­டுகள்  சபையின்  வதி­வி­டப் ­பி­ர­தி­நிதி ஹனா­சிங்­கரை சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி கோத்­த­பாய  ராஜ­பக் ஷ  காணா­மல்­போ­ன­வர்கள் இறந்­தி­ருக்­கலாம் என்றும் அவர்­க­ளுக்கு இறப்பு சான்­றி­தழ்­களை வழங்க  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும்   தெரி­வித்­தி­ருந்தார்.

உரிய நடை­மு­றை­களைப் பின்­பற்றி  இவ்­வாறு பிறப்பு சான்­றி­தழ்­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என  ஜனா­தி­பதி   ஐ.நா பிர­தி­நி­தி­யிடம்  குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த அறி­விப்பு தொடர்­பா­கவும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் பாரிய விமர்­ச­னங்கள் எழுந்­தன.   இவ்­வாறு  வெறு­மனே காணா­மல்­போ­ன­வர்கள்   இறந்­து­விட்­ட­தாக  கூற­ மு­டி­யாது என்றும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும்  தெரி­விக்­கப்­பட்­டது.

எப்­ப­டி­யி­ருப்­பினும்  இந்த காணா­மல்­போ­னோரின் விவ­கா­ர­மானது   தொடர்ச்­சி­யாக  ஒரு மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யா­கவே நீடித்து வரு­கி­றது. ஒரு உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மித்து   உண்­மை­களை கண்­டு­பி­டிக்­கு­மாறும் சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய­ நா­டுகள் சபையும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.   இன்­றைய தினம்  ஜெனிவா மனித  உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள   இலங்கை தொடர்பான விவாதத்திலும்  இந்த காணாமல்போனோர்  விவகாரம் மிக முக்கியமான  ஒரு இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மக்களுக்கு  ஒரு நியாயமான  முடிவை வழங்கவேண்டியது   மிகவும் அவசியமாகும்.  தமது உறவுகளை தொலைத்துவிட்டு சொல்லொணாத் துன்பங்களை   எதிர்கொண்டும்   பாரிய வேதனை­­யுடனும் இந்த காணாமல்போனோரின் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காணாமல்போன தமது உறவுகள்  உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது கூட தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள்   பாரிய கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.

எனவே  இந்த விடயம் தொடர்பில் அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.  பாதிக்கப்பட்டி­ருக்கின்ற மக்கள் இந்த  நாட்டின் பிரஜைகளே என்பதை  உணர்ந்து  அவர்களின்  பிரச்சினைக்கு   ஒரு முடிவை  கொடுக்கவேண்டியது  அவசியமாகும்.  அதனால் தொடர்ந்தும்  இந்த பிரச்சினையை நீடிக்க விடாமல்  காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை  கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

(27.02.2020 வீரகேசரி நாளிதழின்  ஆசிரிய தலையங்கம் )