கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த இலங்கை உட்பட ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏயர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று காலை டெல்லியில் தரையிறங்கியுள்ளனர்.

டோக்கியோவிலிருந்து டெல்லியில் தரையிறங்கிய இந்த விமானத்தில் 119 இந்தியர்களும், இரு இலங்கையர்களும், நேபாளம், தென்னாபிரிக்கா மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவளை தனது நாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட ஏனையவர்களையும் இந்தியவுக்கு கொண்டு வருவதற்கு அனுமதியளித்த ஜப்பான் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

3700 பயணிகளுடன் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 132 பணியாளர்கள் மற்றும் ஆறு பயணிகள் உட்பட 138 பேர் இருந்தனர். 

இவர்களில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்கள் ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.