பொறுப்­புக்­கூ­ற­லிலி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­து­விட்­டது. எனவே இனி­யா­வது சர்­வ­தேச சமூகம்  எம­க்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்று  காணாமல் போனோரின் உற­வி­னர்கள் ஜெனி­வாவில் தெரி­வித்­தனர்.

ஜெனிவா பேர­வையின் 43ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில்  ஜெனிவா வந்­துள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் உற­வு­களின் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் நேற்று நடை­பெற்ற உப குழுக் கூட்டம் ஒன்றில் தெரி­வித்­தனர்.

சங்­கத்தின் தலைவி யோக­ராஜா கன­க­ரஞ்­சனி மற்றும் செய­லாளர் லீலா­தேவி ஆனந்­த­ராஜா சங்­கத்தின் மட்டு மாவட்ட தலை­வியும் வடக்கு கிழக்கு உப தலை­வி­யு­மான அம­லராஜ் அம­ல­நா­யகி ஆகி­யோரே இம்­முறை ஜெனிவா வந்­துள்­ள­துடன் இலங்கை குறித்த உப­குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்று உரை­யாற்­ற­வுள்­ளனர்.

அவர்கள் நேற்று  மேலும்  கருத்து வெ ளியி­டு­கையில்,

ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் சர்­வ­தே­சத்­தி­டமும் நீதியை பெறவே நாங்கள் இங்கு வந்­துள்ளோம். சர்­வ­தேசம் இனி­யா­வது எமக்கு நீதியை பெற்­றுத்­த­ர­வேண்டும்.

இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக இலங்கை அறி­வித்­து­விட்­டது. எனவே இனி­யா­வது சர்­வ­தேசம் எமக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.  

இந்த விவ­கா­ரத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்டு சென்று எமக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை நாங்கள் நம்­ப­வில்லை. கடந்த அர­சாங்­கமும் எம்மை ஏமாற்­றி­யது.  தற்­போ­தைய அர­சாங்கம் நேர­டி­யா­கவே கூறி­விட்­டது. எனவே குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு இந்த விட­யத்தை கொண்­டு­செல்­ல­வேண்டும். காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புரியவேண்டும் என்றனர்.