ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  43 ஆவது கூட்டத்தொடரின்  இன்றைய அமர்வில்  இலங்கை தொடர்பான விவாதம்   நடைபெறவுள்ளது.

 ஐக்கியநாடுகள்  மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்  இன்றைய தினம் இலங்கை குறித்த  அறிக்கையை   பேரவையில் தாக்கல் செய்த பின்னர்   விவாதம் நடைபெறும்.

இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன   மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு   பதிலளிக்கவிருக்கிறார்.  

ஐக்கியநாடுகள் மனித  உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் கடந்த  திங்கட்கிழமை  ஜெனிவாவில் ஆரம்பமானது . முதல்நாள் அமர்வில்   ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் மற்றும்  மனித உரிமை ஆணையாளர்   மிச்செல் பச்லட்  உள்ளிட்டோர்   உரையாற்றியிருந்தனர். முதலாவது அமர்வில்  இலங்கையின்  சார்பில்  வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  ஜெனிவா வந்தடைந்த   வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்றைய தினம்  இலங்கையின் சார்பில் பேரவையில் உரையாற்றியிருந்தார். இதன்போது இலங்கையானது  ஜெனிவா    பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக  அறிவித்திருந்தார்.

அதன்படி இன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவிருக்கிறது.  முதலில்  மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இலங்கை குறித்த அறிக்கையை  பேரவையில் தாக்கல் செய்வார். அதன்பின்னர்  உறுப்புநாடுகள்   இலங்கையிடம்  கேள்விகளை எழுப்பவிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது  இலங்கையானது பிரேரணையின் அனுசரணையிலிருந்து வெளியேறவுள்ள நிலையில்  அடுத்தகட்டமாக பொறுப்புக்கூறலை  உறுதிப்படுத்த அரசாங்கம் என்ன செய்யும்  என்றவாறான கேள்விகளை எழுப்புவதற்கு   சர்வதேச நாடுகள் தயாராகி வருவதை இங்கு காணமுடிகின்றது. எனவே உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு  வெளிவிவகார  அமைச்சர் தினேஷ் குணவர்தன  இன்றைய தினம்    பதிலளிக்கவிருக்கிறார்.