ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையில் 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுவது தொடர்பில் பிரிட்டன் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றது.
நேற்றைய தினம் ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்து பேச்சு நடத்திய பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹகமட் இவ்வாறு பிரிட்டனின் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமன்றி இலங்கையானது மனித உரிமையை பாதுகாக்கவேண்டும் என்றும் நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹமட் தனது டுவிட்டர் பதிவில் என்னுடைய முதலாவது சந்திப்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்து பேச்சு நடத்தினேன் இதன்போது இலங்கையானது 30/1 பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து வெளியேறுவது தொடர்பில் எனது கடும் அதிருப்தியை வெளியிட்டேன்.
அத்துடன் இலங்கையானது நல்லிணக்கம் பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மனித உரிமையை பாதுகாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.