அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 161 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற  மேற்கிந்திய தீவுகளின் அணியின் தலைவர் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திமுத் கருணாரட்ணவும் குசால் பெரேராவும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்ததால் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டது.

எனினும் குசல் மென்டிஸ் அவிஸ்க பெர்ணான்டோ இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக விளையாடிதுடன் இருவரும் சதங்களை பெற்றதுடன் மூன்றாவது விக்கெட்டிற்காக 239 ஓட்டங்களை பெற்றனர்.

அவிஸ்க பெர்ணான்டோ 127 ஓட்டங்களை பெற்ற அதேவேளை மென்டிஸ் 119 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 345 ஓட்டங்களை பெற்றது.

பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது விக்கெட்டிற்காக 64 ஓட்டங்களை பெற்றபோதிலும்  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து 39 ஓவர்களில் 184 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியயை சந்தித்தது.

மேற்கிந்திய அணியின் சார்பில் மீண்டும் ஹோப் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்களை பெற்ற அதேவேளை இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கவும் சந்தகனும் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் இரண்டில் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.