யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

“2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. முழுமையாக தலைக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடுகள் இல்லை. வர்த்தக நிலையத்திலிருந்து புறப்பட்ட கும்பல், அந்த வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் கண்ணாடி மற்றும் உதிரிப்பாகங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பி்டத்தக்கது.