(ஆர்.விதுஷா)

சம்பள முரண்பாட்டுப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரக்கோரி அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட    சுகயீனவிடுமுறை போராட்டம்  மற்றும் ஆர்பாட்ட பேரணியின்   காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தது.

இடைக்கால கொடுப்பனவை  வழங்குதல் உள்ளிட்ட  சம்பள  முரண்பாட்டுக்கான தீர்வினைப்பெற்றுத்தருமாறு கோரி இன்று நாடளாவிய ரீதியிலுள்ள அதிபர் , ஆசிரியர்கள் சுகயீன  விடுமுறைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாகவே அரச பாடசாலைகளின் மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாக 100 இற்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. 

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான அதிபர்களும்இந்த எதிர்ப்பு  நடவடிக்கைக்கான ஆதரவை வழங்கியிருந்ததுடன், 97 வீதமானவர்களடைய பங்களிப்பு இந்த ஆர்பாட்டத்திற்கு  கிடைக்கப்பெற்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேசரிக்கு தெரிவித்தார். 

சுகயீன விடுமுறைப்போராட்டத்தின் ஒரு அங்கமாக 32 கல்வித் துறைசார் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று காலை  9 மணிக்கு  பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டு  மைதானத்திலிருந்து கல்வி அமைச்சு வரை ஊர்வலமாக சென்று தமது ஏழு அம்ச கோரிக்கையை சமர்ப்பிக்க முற்பட்டனர். 

இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், வாக்குறுதியளித்த படி சம்பள  முரண்பாட்டுக்கான தீர்வினைப்பெற்றுத்தாருங்கள் ,23  வருடங்களாக  தீர்வு காணப்படாத சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை  பெற்றுத்தாருங்கள் என்ற சுலோகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோ.எழுப்பியவாறும்  கல்வி அமைச்சு வரை ஊர்வலமாக சென்றனர்.

அதன் போது கல்வி அமைச்சை அண்டிய பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன்,பொலிசார் குவிக்கப்பட்டு  ஆர்ப்பாட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருப்பினும் பொலிசாரின் பாதுகாப்பு வேலியையும் மீறு கல்வி அமைச்சினுள் நுழைய முற்பட்ட ஆர்பாட்ட  காரர்களுக்கும் பொலிசாருக்கும்  இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் ஆர்பாட்டகார்கள் அந்த இடத்தை விட்டு நகராத கல்வி அமைச்சரை சந்தித்து தமது ஏழு அம்ச கோரிக்கையை  கையளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அவர்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டிருக்கவில்லை. 

காலையில் ஆரம்பமாகிய எதிர்ப்பு ஆர்பாட்டம் பிற்பகல் 2 மணிவரை தொடர்ந்தது. எதிர்ப்பு ஆர்பாட்டம் எவ்வித தீர்மானங்களோ,இணக்கப்படுகளோ இன்றி முடிவடைந்திருந்தது. ஆகவே,அவர்ளுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளரிடம் வினவிய  போது அவர் கூறியதாவது  , 

நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 100 இற்கும் அதிகமான பாடசாலைகளை மூடி எதிர்ப்பு ஆர்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

இதற்காக 97 வீத ஒத்துழைப்பு அதிபர் ஆசிரியர்களிடமிருந்து  கிடைக்கப்பெற்றிருந்தது. சுகயீன விடுமுறைப்போராட்டத்தின் அங்கமாக பத்தரமுல்லை கல்வி அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பு  ஆர்பாட்டத்தினையும் மேற்கொண்டிருந்தோம்.

கடந்த அரசாங்கம் ஆசிரியர்,அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக அறிவித்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அமைச்சரவைப்பத்திரம்  வெளியிடப்பட்டது. 

இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு மீண்டும் கோரிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அதனை வழங்குவதாக கூறி கடந்த அரசாங்கம் ஒக்டோபர் மாதம் 15  ஆம்  திகதி மீண்டுமொரு அமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆகவே,கடந்த 14  ஆம் திகதி ஆர்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தோம். அதனை  தொடர்ந்து 20 திகதி அதற்கான முடிவை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியிருந்தது. இருப்பினும் எந்த தீர்வும் இதுவரையில்  கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.