(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சீர்குலைக்கின்றார் என்று மக்கள் கருதுவது முற்றிலும் தவறானதாகும். நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர்  பதவிகளை வழங்கியுள்ளார். என பாராளுமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது. தேர்தல் காலத்தில் தேசதுரோக ஒப்பந்தமாக விமர்சிக்கப்பட்ட எம்.சி.சி. ஒப்பந்தத்தை பொதுத்தேர்தலுக்கு பிறகு  இரகசியமான முறையில் கைச்சாத்திடும் முயற்சியினை அரசாங்கம் முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கம் தரமான  நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை.  ஆனால் தமக்கு தேவையானவர்களை நாட்டுக்கு கொண்டு வந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் நடடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கம் தற்போது  முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் ஒன்றும் புதிதான விடயமல்ல, சர்வதேசத்தின் மத்தியில் நாடு பல நெருக்கடியை எதிர் கொள்ள 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஐக்கிய  நாடுகள் சபையின்   அப்போதைய செயலாளர் நாயகத்துடன் செய்துக் கொண்ட  கூட்டு அறிக்கையே பிரதான காரணம்.