அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டீஸின் சதம் மற்றும் வலுவான இணைப்பாட்டம் காரணமாக இக்கட்டான நிலையிலிருந்து மீண்டெழுந்த இலங்கை அணி 345 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அடணியானது துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழஙக்கியது. அதன் காரணமாக இலங்கை  அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடன் ஷெல்டன் கோட்ரிலின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய குசல் பெரேராவும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளரான ஷெய் ஹோப்பிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை  அணி 2.3 ஓவர்களுக்கு 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று முக்கியமான இரண்டு விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு சென்றது.

எனினும்  3 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டீஸின் இணைப்பாட்டமானது அணியை சிறந்த நிலைக்கு கொண்டு சென்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியினரின் பந்து வீச்சுகளை இவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு அனைத்து திசைகளிலும் அடித்தாட இலங்கை அணியானது 2 விக்கெட்டுகளுடன் 15 ஓவர்கள் முடிவில் 76 ஓட்டங்களையும், 26.2 ஓவர்கள் முடிவில் 150 ஓட்டங்களையும் பெற்றது.

36.3 ஆவது ஓவரில் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்களில் தனது இணடாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுணையில் அவருக்கு தோள் கொடுத்து ஆடி வந்த அவிஷ்க பெர்னாண்டோ 38 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார்.

தொடர்ந்தும் இவர்கள் ஆடுகளத்தில் நிலைத்து நின்றாட இலங்கை அணியானது 40 ஓவர்கள் நிறைவில் 246 ஓட்டங்களை பெற்றது.

எனினும் இதன் பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கிய குசல் மெண்டீஸ் 40.2 ஆவது ஓவரில் மொத்தமாக 119 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மெத்தியூஸ் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவிஷ்க பெர்னாண்டோவும் மொத்தமாக 123 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் அல்சாரி ஜோசபின் பந்து வீச்சில் கீமோ போலிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்ப மெத்தியூஸ் ஒரு ஓட்டத்துடன் போல்ட் ஆனர்.

இதனால் இலங்கை அணி 43 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றதுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்றது.

இந்த 345 ஓட்டங்கள் பெறுவதற்கு 33 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.  அதன்படி ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் பெறப்பட்ட அதிகூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை இதுதான். 

இதனால் இது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. இதற்கு முன் இங்கிலாந்து பெற்ற 333 ஓட்டங்கள்தான் சிக்ஸர் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கோர்ட்ரல் 4 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Photo Credit : ICC