Published by R. Kalaichelvan on 2020-02-26 18:11:24
(செ.தேன்மொழி)
நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் தாம் அவர்களுடன் இணைந்து போராடுவதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடமொன்றை நீக்கும் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எனக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்படு வருகின்றன.
இந்த கட்டிடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதனை மூன்று வருடகாலமாக தர்ஷன சம்பத் என்ற நபரே குத்தகைக்கு பெற்று உணவகமொன்றை நடத்தி வந்தார்.
இதற்கான மாதாந்த வாடகையாக ஒரு இலட்சத்து 62 ஆயிரம் ரூபாவையும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இவர் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த கட்டிடத்தில் உணவகமொன்றை இவர் நடத்தி வந்ததுடன் , இதில் 40 குடும்பங்களைச் சேர்ந்தோர் பணிபுரிந்து வந்தனர்.
இவ்வாறான நிலையிலே ஆளும்கட்சியை சேர்ந்த சில அரசியல் வாதிகளின் தேவைக்காக இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடமொன்றை நீக்குவதென்றால் அதனை குத்தகைக்கு பெற்றுள்ள நபருக்கு அது தொடர்பில் மூனக்று மாத இடைவெளிக்கு முன்னராவது தெரியப்படுத்த வேண்டும்.
அதேவேளை மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டிடமொன்றை நீக்குவதென்றால் அது தொடர்பில் நீதி மன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டியதும் அவசியமாகும்.
இவ்வாறு எந்த செயற்பாடுகளையும் செய்யாமல் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் கட்டிடத்தை நீக்க முற்பட்டனர். அதற்கே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இந்த விடயங்கள் தொடர்பில் அவர்களை தெளிவுப்படுத்திய போதும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அதனாலேயே அவர்களுடன் முரண்பட வேலண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் 150 பொலிஸாரையும் பாதுகாப்பிற்கு அழைத்துச் சென்று கட்டிடத்தை இடித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறான கட்டிடமொன்றை நீக்குவது தொடர்பில் எஸ்.பி.திசாநதயக்க கருத்து தெரிவித்த போது தமது மக்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருவதனால் அதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தொடரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவலிங்கம் வெளியேறியிருந்தார்.
இவர் அவரது சமூகத்திற்காக இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கையில் நான் எனது மக்களுக்காக இதைக்கூட செய்யக் கூடாதா?
சிங்களமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான பிரசாரங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது நியாயமானதல்ல.
இதனால் 40 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமது வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளது.இவர்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் நாங்கள் அவர்களுடன் இணைந்து செய்றபடுவோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிபடத்தக்கது.