(ஆர்.விதுஷா)

விமானப்படையின் 69 ஆவது  ஆண்டு விழாவை  முன்னிட்டு  விமானப்படை பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக  தெரிவித்த விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கல டயஸ்,  அதில் சிறப்பம்சமாக 21 ஆவது தடவையாகவும் முழு நாட்டையும்  உள்ளடக்கிய வகையிலான சைக்கிள் ஓட்டப்போட்டியை நடத்தவும்  தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விமானப்படையின் 69 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் தொடர்பில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று விமானப்படைத்தலைமையகத்தில் இடம் பெற்றது. இதன்போதே விமானப்படைத் தளபதி இதனை  தெரிவித்தார்.

இதேவதளை மார்ச் மாதம் 2 ஆம் திகதி   இடம் பெறவுள்ள ஆண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்த  விமானப்படை  ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.   

அந்த வகையில் முதலாம் திகதி  களனி ரஜமஹா  விகாரையில்  மல்லிகைப்பூ  பூஜை  இடம்பெறவுள்ளது. அதனை  தொடர்ந்து    இரண்டாம் திகதி விமானப்படையினரின் சம்பிரதாய ரீதியான  அணிவகுப்பு  இடம்பெறவுள்ளது.  

5ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையான  காலப்பகுதியில்  சைக்கிள் ஓட்டப்போட்டியை நடத்தவும் விமானப்படை ஏற்பாடு செய்துள்ளது. அ

தனை  தொடர்ந்து 11,12  ஆம் திகதிகளில்  சிவனொளிபாத  மலைவளாகத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்  இடம் பெறவுள்ளது. 

மேலும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில்  தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலைகள், வைத்தியசாலைகள்  மற்றும்   சிறுவர் இல்லங்கள் ஆகியவற்றின் கட்டட நிர்மாணப்பணிகளுக்கான  ஒத்துழைப்பை விமானப்படை  வழங்கவுள்ளது. 

அத்துடன்  சைக்கிள்  ஓட்டப்போட்டியில் பங்கு  பற்றி வெற்றிபெறுபவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கி  வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.