(எம்.மனோசித்ரா)

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 31 /1 தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகினாலும் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகும் நிலைப்பாடு அரசாங்கத்திற்கு கிடையாது எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, சிறுபான்மை சமூகத்தினருக்கு நாம் ஆதரவாக இருக்கின்ற போதிலும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

சமகால அரசாங்கம் அதி கூடிய சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதாகும். எனவே கடந்த அரசாங்கத்தைப் போன்று ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் சுமந்திரன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்டதைப் போன்ற நிலைமை தற்போதில்லை என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ' இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் தீர்மானத்திலிருந்து முழுமையாக விலக முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.

இந்த கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? ' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இது சுமந்திரன் போன்றவர்களது அரசாங்கமல்ல. அதிகூடிய சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாகும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஓரளவு வாக்களித்திருந்தார்கள். தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தைப் போன்று ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் சுமந்திரன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்டதைப் போன்றதல்ல.

உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் நூற்றுக்கு 85 வீதமான மக்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருந்தனர். அதே போன்று தெற்கு சிங்கள பௌத்த மக்களில் 85 வீதமானோர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

இவ்வாறானா பிளவினை சுமந்திரன் போன்றோரே ஏற்படுத்தியிருக்கிறார்கள். எவ்வாறிருப்பினும் சிறுபான்மையினருக்கு எமது முழுமையான ஆதரவு இருக்கிறது. ஆனால் அதற்காக அரசாங்கத்தை மட்டுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.