டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு தொகை சிகரெட்டுக்களை கடத்திக்கொண்டுவர முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் டுபாய்க்கு பணி நிமித்தம் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் இரண்டு மாத காலம் அந்த நாட்டிலே தங்கியிருந்தார்.

குறித்த நபருக்கு தொழில் கிடைக்காததால் மீண்டும் தனது சொந்த நாட்டுக்கு திரும்பிய வேளையிலேயே சிகரெட்டுக்களை விலைகொடுத்து கொள்வனவு செய்து கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேக நபர் நேற்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அந்த நபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பொதியைச் சோதனை செய்தபோது வெளிநாட்டில் உற்பத்தி செய்யும் 10 ஆயிரத்து 200 சிகரெட்டுக்களை மறைத்து கொண்டுவந்துள்ளமை தெரியவந்தது.

இதன்பெறுமதி சுமார் 6 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் நேற்று மாலை அபராதம் செலுத்திய நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.