நாட்டில்  தொடர்ச்­சி­யாக   விபத்து சம்­ப­வங்கள் அதி­க­ரித்து செல்­லு­கின்ற  வேகத்தைப் பார்க்­கும்­போது   போக்­கு­வ­ரத்து தொடர்­பான  சட்­ட­திட்­டங்கள் மேலும்  பலப்­ப­டுத்தப்பட வேண்டும் என்­ப­துடன்   இது­தொ­டர்­பாக மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு செயற்­பா­டுகள்  அதி­க­ளவில்   முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதும் அவ­சி­ய­மாக காணப்­படு­கின்­றது.  நாட­ளா­வி­ய­ரீ­தியில் தொடர்ச்­சி­யாக  பல்­வேறு கோர விபத்து சம்­ப­வங்கள் அடிக்­கடி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருப்­பதை காண­மு­டி­கின்­றது.

பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் விபத்து சம்­ப­வங்கள் அதி­க­ரித்து செல்­வதை  அவ­தா­னிக்க முடி­வ­துடன் விபத்­துகள் கார­ண­மாக ஏற்­படும்  உயி­ரி­ழப்பு சம்­ப­வங்கள் மற்றும்  காய­ம­டையும் சம்­ப­வங்கள் என்­பன   அதி­க­ரிக்­கின்­றன.  

2020 ஆம் ஆண்டு தொடக்­கத்­தி­லேயே பல்­வேறு கோர விபத்து சம்­ப­வங்கள்  நாட்டின்  பல்­வேறு பகு­தி­க­ளிலும் பதி­வா­கி­யி­ருந்­தன.  அனைத்து விபத்து சம்­ப­வங்­க­ளிலும்   உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை  கடந்­த­ கா­லங்­களை விட அதி­க­ளவில்   பதி­வா­கி­யி­ருந்­தமை இங்கு  சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. கடந்த  ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு   வவு­னியா  – ஓமந்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட   பன்­றி­க்கெய்தகுளம் ­ப­கு­தியில்  பஸ்ஸும் ஜீப் வண்­டியும் நேருக்கு நேர் மோதிக்­கொண்­டதில்  இடம்­பெற்ற  விபத்தில்  ஐந்­துபேர்  உயி­ரி­ழந்­தனர்.

கொழும்­பி­லி­ருந்து பருத்­தித்­துறை நோக்கி பய­ணித்த  பஸ்­வண்டி   பன்­றி­க்கெய்­த­குளம் பகு­தியில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது   யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­பு­நோக்கி வந்­து­கொண்­டி­ருந்த ஜீப் வண்டி கட்­டுப்­பாட்டை இழந்து  பஸ் பய­ணித்த பாதை ஒழுங்­கைக்குள்  சென்று பஸ்­ஸுடன் நேருக்கு நேர் மோதி­யதில் இந்த   விபத்து சம்­பவம் பதி­வா­கி­யது.  அதே­போன்று   கடந்த காலங்­களில்  வடக்­கிற்கு செல்லும் ஏ–9 வீதியில் பல  கோர விபத்து சம்­ப­வங்கள்  இடம்­பெற்­றி­ருந்­தன. இதனால் உயி­ரி­ழப்­புக்­களும் காய­ம­டைந்த சம்­ப­வங்­களும்   அதி­க­ளவில் பதி­வா­கி­யி­ருந்­தன.

நாட­ளா­வி­ய ­ரீ­தியில் அன்­றாடம் பல்­வேறு விபத்து சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.  தினம்  சரா­ச­ரி­யாக  ஏழுபேர் அல்­லது எட்­டுபேர் விபத்­துகள் கார­ண­மாக  உயி­ரி­ழப்­ப­தாக  புள்­ளி­ வி­ப­ரங்கள் கூறு­கின்­றன. அத்­துடன்   வருடம் ஒன்­றுக்கு  2500–3000க்கும் இடைப்­பட்ட  எண்­ணிக்­கை­யி­லான உயி­ரி­ழப்­புக்கள்  இந்த விபத்­துகள் கார­ண­மாக பதி­வா­கின்­றன.  அதே­போன்று அதி­க­ள­வான  மக்கள் விபத்­துகள் கார­ண­மாக காய­ம­டைந்து தமது வாழ்க்­கையை இழந்து நிற்­கின்­றனர்.  பல்­வேறு சமூக விளை­வு­களும்  விபத்­துகள் கார­ண­மாக ஏற்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.  விபத்­தொன்றில்  கணவன் இறந்­து­விட்டால் அதன்­பின்னர் அவ­ரது குடும்­பத்தின் சமூகப் பாது­காப்பு, பொரு­ளா­தா­ரப்­ பா­து­காப்பு நிலைமை  கேள்­விக்­கு­றி­யா­கின்­றது.   எனவே  இவ்­வாறு  அதி­க­ரித்து செல்லும் விபத்­து­களை  விரை­வாக  குறைப்­ப­தற்கு அல்­லது தடுப்­ப­தற்கு   பரந்­து­பட்ட ரீதி­யி­லான நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மா­கின்­றன.

விபத்­து­களைப் பொறுத்­த­வ­ரையில் பல்­வேறு கார­ணங்­க­ளினால் இடம்­பெ­று­கின்­றன.  முக்­கி­ய­மாக  சார­திகள் போக்­கு­வரத்து ஒழுங்கு விதி­மு­றை­களை கடைப்­பி­டிக்­காமல் வாக­னத்தை செலுத்­து­வதே விபத்­து­க­ளுக்­கான பிர­தான கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றன.  அதே­போன்று  குடி­போ­தையில்  வாக­னங்­களை செலுத்­துதல்,  தொலை­பேசியில் உரை­யா­டிக்­கொண்டு வாக­னங்­களை செலுத்­துதல்,  வாக­னங்­களை  செலுத்­தும்­போது சார­தி­க­ளுக்கு நித்­திரை ஏற்­ப­டுதல், மிக வேக­மாக வாக­னங்­களை செலுத்­துதல் உள்­ளிட்ட  பல்­வேறு கார­ணங்­க­ளினால் விபத்­துகள்  அதி­க­ளவில் பதி­வா­கின்­றன. முக்­கி­ய­மாக இரவு  நேரங்­களில்  வாக­னங்­களை  சார­திகள் செலுத்­தும்­போது இவ்­வாறு  நித்­திரை ஏற்­படும்  நிலைமை காணப்­ப­டு­கின்­றது.  இது தொடர்பில்  சரி­யான அவ­தானம்  இருக்­க­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை  உரிய முறையில் கடைப்­பி­டித்து வாக­னங்­களை செலுத்­தி­னா­லேயே விபத்­து­களை அதி­க­ளவில் தவிர்த்­துக்­கொள்ள முடியும் என்­பது யதார்த்­த­மாகும்.  அதி­க­ளவில் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறி  வேக­மாக வாக­னங்­களை செலுத்­து­வ­தாலும் விபத்து சம்­ப­வங்கள் பதி­வா­கின்­றன. அது­மட்­டு­மன்றி  வீதி­களை  கடக்கும்  பாத­சா­ரி­களும்  விபத்­து­களில் சிக்கி உயி­ரி­ழக்கும்  சம்­ப­வங்­களும் பதி­வா­கின்­றன.  மேலும் மோட்டார் சைக்­கிள்கள்  விபத்­துக்­குள்­ளா­வது  அதி­க­ரித்து செல்­கின்­றது.  எனவே  இவ்­வா­றான  நிலைமை தொடர்­பிலும் விபத்­துகள்   அதி­க­ரித்து செல்­வ­தற்­கான காரணம் குறித்தும் பொது­மக்கள் விழிப்­பு­ணர்­வுடன்  இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

முக்­கி­ய­மாக  வீதி­களில்  நடந்­து­செல்­லும்­போது,  வீதி­களை கடக்­கும்­போது பொது­மக்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்டும்.  பாத­சா­ரிகள் கட­வை­க­ளில்­கூட  பொது­மக்கள் விழிப்­பு­ணர்­வு­ட­னேயே  கடந்­து­செல்ல வேண்டும்.   அதே­போன்று சார­தி­க­ளுக்கும்  விபத்­து­களை தவிர்ப்­பதில் பாரி­ய­பொ­றுப்பு காணப்­ப­டு­கின்றது. முதலில் எக்­கா­ரணம் கொண்டும் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறி  வேக­மாக  வாக­னங்­களை செலுத்­து­வதை  தவிர்த்­துக்­கொள்­ள­வேண்டும். அள­வுக்­கு­ மீ­றிய  வேகத்தில்   வாக­னங்­களை செலுத்­து­வது சார­தியை மட்­டு­மன்றி    வாக­னத்தில் பய­ணிப்­ப­வர்­க­ளையும்   ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்­பதை  மனதில் வைத்­துக்­கொள்ள­ வேண்டும்.

அதே­போன்று  குடி­போ­தையில்  வாக­னங்­களை செலுத்­து­வ­தையும்  சார­திகள் தவிர்த்­துக்­கொள்­ள­வேண்டும். இவை  அடிப் ­படை விட­யங்­க­ளாக  கடைப்­பி­டிக்­கப்பட­ வேண்டும். விபத்­துகள் அற்ற  ஒரு பாது­காப்­பான  வாக­னப்­ப­யணம் இடம்­பெ­ற­வேண்­டு­மானால் உரிய விதி­மு­றை­களை கடைப்­பி­டிப்­ப­துடன்   சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு வாக­னங்­களை செலுத்த  சார­திகள் முன்­வ­ர­வேண்டும்.   சார­தி­யொ­ருவர்  ஒரு வாக­னத்தை செலுத்­தும்­போது  தன்­மீது நம்­பிக்கை வைத்து தனக்­குப்­பின்னால் பல பய­ணிகள்   பய­ணிக்­கின்­றனர் என்­பதை  எப்­போதும்   மன­தில் ­கொள்­ள­ வேண்டும்.  

இது இவ்­வா­றி­ருக்க அர­சாங்­கமும்  சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்­களும்  விபத்­து­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு சட்­டத்தை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­துடன்  விபத்­து­களை குறைப்­ப­தற்­கான அல்­லது தடுத்து நிறுத்­து­வ­தற்­கான பரந்­து­பட்ட  வேலைத்­திட்­டங்கள் தொடர்பில்  ஆழ­மாக சிந்­திக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மாகும். இந்த இரண்டு விட­யங்­க­ளையும் சம­கா­லத்தில்  கொண்­டு­செல்­ல­வேண்டும். முக்­கி­ய­மாக   போக்­கு­வ­ரத்து சட்­ட­திட்­டங்­களை  அர­சாங்க அதி­கா­ரிகள்   உரிய முறையில்  நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். சட்­டத்தை அமுல்­ப­டுத்­தும்­போது எக்­கா­ரணம் கொண்டும் ஊழல் விட­யங்­க­ளுக்கு இட­ம­ளிக்­காமல் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு மக்­களின் பாது­காப்பில் அக்­கறை செலுத்­தியும் அரச அதி­கா­ரிகள் செயற்­பட  முன்­வ­ர­வேண்டும்.  சட்ட விதி­மு­றை­களை மீறி  வாக­னங்­களை செலுத்தும் சார­தி­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை  கடு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சியம்.

அத்­துடன் குடி­போ­தையில் வாக­னத்தை செலுத்­து­கின்­ற­வர்கள் தொடர்­பா­கவும் கடும் சட்ட நட­வ­டிக்கை அவசியம்.  இவ்­வாறு   சட்­டத்தை  சரி­யாக அமுல்­ப­டுத்­து­வதன்  ஊடாக எந்­த­ள­வு­தூரம்  இந்த   விபத்­து­களை கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­பது குறித்து  சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள் ஆரா­ய­வேண்டும்.  அதே­போன்று   விபத்­து­களை குறைப்­ப­தற்கு  பரந்­து­பட்ட திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு  அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும்.   வெளி­நா­டு­களில் விபத்­து­களை  குறைப்­ப­தற்கு   அந்த நாட்டு அர­சாங்­கங்கள்  எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளன என்­பது தொடர்­பா­கவும் சிந்­தித்து நட­வ­டிக்­கை­களை எடுப்­பது   அவ­சி­ய­மா­கின்­றது.

விபத்­து­களை குறைப்­பது தொடர்­பாக எவ்­வா­றான பரந்­து­பட்ட திட்­டங்­களை முன்­னெ­டுக்­கலாம் என்­பது குறித்து ஆராய்ந்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும். இது தொடர்பில்  புத்­தி­ஜீ­விகள் குழுவை நிய­மித்து  ஆராய்­வது  மிகவும்  முக்­கி­ய­மாகும்.   விபத்­து­க­ளுக்கு அதி­க­ளவு  ஏது­வா­கின்ற கார­ணங்­களை கண்­ட­றிந்து அவை குறித்து ஆரா­ய­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாக இருக்­கின்­றது. தற்­போ­தைய விபத்­துகள் அதி­க­ரித்து செல்லும் போக்கை  பார்க்­கும்­போது மக்­க­ளுக்கு  பொது­போக்­கு­வ­ரத்து தொடர்பில் அச்­ச­நி­லை­மையே ஏற்படுகின்றது. இதனைப் போக்கி பாதுகாப்பான  வாகனப்போக்குவரத்து நிலைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும். கடந்த காலங்களில் அதிகரித்து செல்லும்   விபத்துகள்   தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.  எனினும் அவை எந்தளவு தூரம் வெற்றி யடைந்துள்ளன என்பது தொடர்பாகவும் பார்க்கவேண்டியது அவசியமாகும்.

மேலும் சிவில் சமூக தலைவர்களும் சர்வமத தலைவர்களும்   இந்த  விபத்து சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சாரதிகளுக்கு  சிறந்த  ஆலோசனைகளை   வழங்கலாம்.  சிவில்

சமூக நிறுவனங்கள் நாடளாவியரீதியில் சாரதிகளுக்கு சிறந்த அணுகுமுறை தொடர்பான  பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக  விபத்துகளை  குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும். அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக மட்டும்  விபத்துகளை   குறைத்துவிட முடியாது என்பதே யதார்த்தமாகும். எனவே   விபத்துகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு  சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே  பாதுகாப்பான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க முடியும்.

(23.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )