இலங்கையின் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகள்  தமது தண்டனை காலம் முடிந்து  வெளியேறினாலும் கூட சமூகத்தின்  அலட்சியப்படுத்தல்கள் மற்றும் சந்தேகப் பார்வைகளால் மீண்டும் சிறைச்சாலைகளுக்கு திரும்புவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதாவது போதைப்பொருள் விற்பனை மற்றும் சிறு திருட்டு சம்பவங்கள், போதைப்பொருள் பாவனை, அதை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் தண்டனை பெறுவோர்  விடுதலையானவுடன்  அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருப்பதில்லை. மீண்டும் அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருவதையே அவர்கள் விரும்புகின்றனர். ஏனெனில் இங்கு அவர்கள் தங்குவதற்கும் உணவுக்கும் பிரச்சினைகளில்லை. ஆனால் இதை எத்தனை காலந்தான் தொடர்வது என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டிருக்கும் திட்டமே PEADEP எனப்படும் கைதிகளுக்கு தொழிற்பயிற்சியளித்து அவர்களுக்கு வலுவூட்டி வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் திட்டமாகும்.

  

இத்திட்டத்தின் மூலம் அவர்கள் மொழிப் பயிற்சி, கல்வித்தகுதிகளுக்கேற்ப தொழிற்றிறன் பயிற்சிகள் வழங்கப்படும். தண்டனை காலம் முடிவில் அவர்கள் வெளியேறும்போது தமக்கான தொழிலொன்றை பெற்று தமக்கும் தமது குடும்பத்துக்குமான வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டிருப்பர் என்பது முக்கிய விடயம்.

இத்திட்டத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ளார். நீதி மற்றும் மனித உரிமைகள் சட்ட மறு சீரமைப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 5 ஆயிரம் கைதிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான சகல பயிற்சிநெறிகளுக்குமான செலவீனத்தையும் அவன்ட் கார்ட் நிறுவனமே பொறுப்பேற்கவுள்ளது. இதற்காக ஒரு பில்லியன் ரூபாவையும் அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. 

திட்டம் உருவாகக் காரணம்

இத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற போது கருத்துத்தெரிவித்த மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி அரசியல் பழிவாங்கல் காரணமாக நான் மூன்று மாத காலம் சிறைச்சாலையில் இருக்க நேரிட்டது. அப்போது அங்கு பலரை சந்தித்தேன். அவர்களில் பலர் தமக்குள்ள பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்தனர். தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விடுதலைப் பெற்று சென்றாலும் தாம் தங்குவதற்கோ அல்லது தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளவோ வழியில்லை என்றும் தெரிவித்தனர். அதன் பிறகே நான் இந்த திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் என்றார்.

சிறைக்கைதிகள் 

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். இங்கு இடவசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. மேலும்  ஒரு தொகை கைதிகள் வெளியேறும் பட்சத்தில் அதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீண்டும் சிறைக்கு வருகின்றனர். இதில் தண்டனைப் பெற்று வெளியேறுவோரும் அடங்குகின்றனர். ஆகவே இவர்களின் தண்டனை காலத்தை கருத்திற்கொண்டு அந்த காலப்பகுதியில் இவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் சிறையிலிருந்து விடுதலையாகும் போது அவர்கள் ஒரு பொருத்தமான தொழிலுடன் இணைக்கப்படுகின்றனர். 

இதன் காரணமாக அவர்கள் குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடுவது தவிர்க்கப்படுவதுடன் மறுபடியும் சிறைச்சாலைக்கு வருவது தவிர்க்கப்படுகின்றது. இதேவேளை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் இத்திட்டம் பற்றி சிறைச்சாலைகள் ஆணையாளர் தென்னகோன் கருத்துத் தெரிவிக்கும் போது குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போது கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. அதேவேளை விடுதலையாகும் கைதிகள் ஒரு வாரத்தில் மறுபடி அதே குற்றத்துக்காக சிறைக்கு வருகின்றனர்.  இங்கு  ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் 25 ஆயிரம் பேரை வைத்திருக்கின்றோம். இது எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. 

சிறைச்சாலைகளுக்குள்  வருமானத்தைப் பெற்றுத்தரும் வேலைத்திட்டங்கள் பாரியளவில் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. அண்மைக்காலமாகவே அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.  குறிப்பாக பள்ளேகல சிறைச்சாலையில் பாதணிகள் செய்யும் தொழிலில் 500 – 700 பேர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மஹர சிறைச்சாலையில் மின்சார உபகரணங்கள் செய்யும் தொழிலில் ஆரம்பத்தில் 25 பேர் ஈடுபட்டனர். தற்போது அத்தொகை 75 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று பலன்சேன மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் 40 பேர் பாதணி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

மட்டுமல்லாது, கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது மற்றும் தொழிற்பயிற்சிகளை  நாம் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.  தனியார் துறையினர் கைதிகளுக்கு தொழிற்றிறன் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் சிறைச்சாலை சட்டங்கள் மறுசீரமைக்கப்படல் வேண்டும். மட்டுமன்றி, கைதிகளில் இவ்வாறு தொழிற்றிறன் உள்ளவர்களை அடையாளம் காணும் பொறுப்பை சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் ஏற்க வேண்டும். அது குறித்த தரவுகளை எமக்கு தருமாறு நான் கேட்டுள்ளேன்.எமது பணிகள் வேறு. இந்நிலையில் அவன்ட் காட் நிறுவனத்தின் இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம் என்றார். 

இத்திட்டம் குறித்து  நீதி மற்றும் மனித உரிமைகள் சட்ட மறு சீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில், உலகத்தில் வேறு எங்கேயும் சிறைக்கைதிகளுக்கு  இப்படி ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக நான் அறியவில்லை.  ஆகையால் இது வரவேற்கப்பட வேண்டியதொன்று. இதற்கு நிதியையும் தானே ஒதுக்கி கைதிகளுக்கு பயிற்சியளித்து அதற்குரிய பணியையும் பெற்றுத்தருவதற்கு மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி முன்வந்திருக்கிறார். இதை முன்னெடுக்க எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார். 

இனபேதம் பார்க்காது இத்திட்டம் முன்னெடுக்கப்படும். இத்திட்டத்தில் ஆண், பெண் மற்றும் இனபேதம் பார்க்கப்படாது. ஏனென்றால் அனைவரும் இலங்கையர்கள் என்ற நோக்கத்திலேயே எம்மால் இது முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்ன் காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவிக்கிறார். அது குறித்து அவர் கூறுகையில், நான் நாட்டுக்காக சேவை செய்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. நாட்டை காக்கும் திடசங்கற்பம் பூண்டவர்கள்  இனபேதம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லோருமே ஒரு இன மக்களே. நாம் தெரிவு செய்திருக்கும் ஐயாயிரம் கைதிகளில் தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். மட்டுமன்றி, இவர்களுக்கான பயிற்சி நெறியின் இடையில் பெண் கைதிகளும் இதில் உள்ளடக்கப்படுவர். அவ்வாறான பெண் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார். சிறைக் கைதிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் இவ்வாறான சமூக சேவை அடிப்படையிலான திட்டங்களுக்கு தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.