கொரோனா வைரஸ் பரவலை எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது இரத்து ஆக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 161 ஆக காணப்படுகிறது. அது மாத்திரமல்லாது டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 691 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே கொரோனாவின் தாக்கத்தை கருத்திற் கொண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர், மே மாத இறுதிக்குள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைத்தல் அல்லது இடமாற்றம் செய்வதற்குப் பதிலாக, விளையாட்டுகளை முற்றிலுமாக இரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.