(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில்  ஜெனிவாவில் களமிறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புகள் சர்வதேச சமூகத்தின்  பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைக்கு  30/1 பிரேரணையை அமுலாக்க அழுத்தம் கொடுக்கவேண்டுமென  வலியுறுத்தி வருகின்றன.  

தற்போது ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள  பிரித்தானியர் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த  தமிழீழ அரசாங்கம்  உள்ளிட்ட பல்வேறு  புலம்பெயர் அமைப்புக்கள்   சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர். முக்கியமாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,    ஐக்கியநாடுகள்  மனித உரிமைபேரவை உறுப்பு நாடுகளின்  பிரதிநிதிகள்  மற்றும் சர்வதேச  மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள்  உள்ளிட்ட   பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்ற புலம்பெயர் அமைப்புக்கள்  ஜெனிவா பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென  கோரியுள்ளன.

புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவா பிரதிநிதிகளுக்குமான   சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது இலங்கை தொடர்பாக  கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.  ஜெனிவா பிரேரணையின்  அனுசரணையிலிருந்து இலங்கை விலக உள்ளமை தொடர்பாக    இதன்போது சுட்டிக்காட்டிய புலம்பெயர் அமைப்புக்கள் இது தொடர்பாக சர்வதேச   சமூகம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென   கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த நான்கரை வருடங்களாக ஜெனிவா பிரேரணை  முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்றும்  அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தங்கள்  சர்வதேச சமூகத்தினால்  பிரயோகிக்கப்படவேண்டுமெனவும்  புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே  எதிர்வரும் 9ஆம் திகதி புலம்பெயர் அமைப்புக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்துவதற்கு  ஏற்பாடு செய்துள்ளன. இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம்    ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ளது.  இலங்கையானது 30/1  பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலக உள்ளதாக இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக  மனித  உரிமை பேரவைக்கு அறிவிக்கவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.