Published by R. Kalaichelvan on 2020-02-26 11:39:47
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இராணுத்தினருக்கு மேலதிகமாக கடற்படையினரின் பொலிஸார் மற்றும் விமானப்பிடையினரின் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாள இராணுவம் ( மிலிட்டரி பொலிஸ் ) கடந்த 24 ஆம் திகதி முதல் முக்கியமான வீதிகளில் நிறுத்தப்பட்டனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டத்தை செயல்படுத்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியிருந்தார்.
காலை மற்றும் பிற்பகலில் போக்குவரத்து பொலிஸாருக்கு உதவவென இந்த இராணுவ பொலிஸ் படைப்பிரிவு நிறுத்தப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, தெரிவித்திருந்தார்.
அதன்படி, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் இராணுவ பொலிஸார் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரின் பொலிஸார் மற்றும் விமானப்படையினரின் பொலிஸாரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.