பாடங்களை மனனம் செய்து பரீட்சைக்கு முகங்கொடுக்கும் கல்வி முறைமைக்கு பதிலாக மாணவர்களை மையமாக கொண்ட புதிய கல்வி முறைமையொன்றை மாற்றியமைக்க வேண்டும்.

அத்துடன் நிலையான கல்வி கொள்கையொன்றை கொண்டு வர நாட்டின் தலைமைத்துவம் எதிர்பார்ப்பதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

காலி லபதுவ சிரிதம்ம கல்லூரியின் 25 ஆவது வருட விழாவில் திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய  பாதுகாப்புக்கு அடுத்தபடியாக கல்வி துறைக்கு முக்கியத்துவம் செலுத்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச , நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் மாற்றம் காணாத புதிய கல்வி கொள்கையொன்றை உருவாக்குவதே அவரின் பிரதான நோக்கமாகும். வரலாற்று தவறுகளை சுட்டிக்காட்டுவதனை விடுத்து எதிர்கால  நலன்களை அடிப்படையாக கொண்டு  செயற்பட வேண்டும்.

அத்துடன் இந்த நாட்டில் உள்ள 373 தேசிய பாடசாலைகளில் 274 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை.

எனவே நாட்டின் கல்வி துறையில் முன்னெடுக்க வேண்டியுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது அனைத்து சவால்களுக்கு முகங்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன்.

நாட்டின் கல்வி கட்டமைப்பில் இணையவிருக்கும் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் திட்டமாகும். இதன்படி அனைத்து கல்வியியற் கல்லூரிகளையும் கல்வியியற் பட்டம்  வழங்கும் நிறுவனமாக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு முதல் கல்வியியற் கல்லூரிகளில் இணையவுள்ள போதனா கல்வி மாணவர்கள் டிப்ளோமாதாரிகளாக அன்றி கல்வியியற் பட்டதாரிகளாக வெளியேறுவார்கள்.

அத்துடன் 373 ஆக காணப்படும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 1000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.