(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதாக குறிப்பிடுவது.

கட்சியின் செயற்குழு  தீர்மானத்திற்கும், கொள்கைகளுக்கும் முரணானதாகும். ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியின் பலவீனத்தன்மை  100 நாட்களுக்குள் வெளிப்பட்டுள்ளது. என  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடிப்படைவாதம், இனவாதம் கொள்கையற்ற விதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பலமான கூட்டணியை  ஸ்தாபித்துள்ளோம். கூட்டணியின் ஊடாக போட்டியிட்டு பலமான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிக்க எம்மால் முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கூட்டணயில் போட்டியிடாமல் தனித்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதாக குறிப்பிடப்படுகின்றன.

இவ்வாறான கருத்துக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கும், கட்சி கொள்கைக்கும் முற்றிலும் முரணானதாகும்.   கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி  கூட்டணி தொடர்பான உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கூட்டணியின்  தலைவர் பதவி, வேட்புமனு தாக்கல் குழுவின் தலைவர் பதவி  வழங்கப்பட்டதுடன்.

பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் அனுமதியும். வழங்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது உறுப்பினர்களாக் உள்ளவர்கள் கூட்டணியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே தற்போது  முரண்பாடான  கருத்துக்களை குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு சில முரண்பாடுகளுக்கு  சுமுகமான தீர்வினை  பெற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.